தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பெட்டிக்குள் மு.க.ஸ்டாலின் போட்ட போது 
தமிழக செய்திகள்

மக்களின் நம்பிக்கையை பெற்றதைத்தான் என்னுடைய சொத்தாக கருதுகிறேன்; திருவண்ணாமலை தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

மக்கள் தங்களது கவலைகளை, கோரிக்கைகளை, எதிர்பார்ப்புகளை, தன்னிடம் ஒப்படைத்துள்ளதாகவும், மக்களின் நம்பிக்கையைப் பெற்றதைத்தான் தன்னுடைய சொத்தாக கருதுவதாகவும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூர் சாலை நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கலைஞர் அரங்கில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற முழக்கத்துடன்

மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரசாரத்திற்கான சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்று, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்' நிகழ்வைத் தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் பேசியதாது:-

உண்மையாக இருப்பேன்

அடுத்தவர் நம்பிக்கையைப் பெறுவது தான் ஒரு மனிதனின் மாபெரும் சொத்து. இவர் நல்லவர், நம்பிக்கையானவர், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார், இவரை நம்பி நம்முடைய கோரிக்கையை வைக்கலாம் என்று உங்களிடம் நான் நம்பிக்கையைப் பெற்றதைத்தான் என்னுடைய சொத்தாக கருதுகிறேன். இத்தகைய நம்பிக்கையைப் பெறுவது சாதாரணமான விஷயம் அல்ல!

நீங்கள் எத்தகைய நம்பிக்கையை வைத்துள்ளீர்களோ, அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். உங்களுக்கும், இந்த நாட்டு மக்களுக்கும் 100 சதவீதம் உண்மையாக இருப்பேன் என்ற வாக்குறுதியைத் திருவண்ணாமலையில் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

100 நாட்களில் தீர்வு

உங்கள் கவலைகளை, உங்களது கோரிக்கைகளை, உங்களது எதிர்பார்ப்புகளை என்னிடம் நீங்கள் ஒப்படைத்துள்ளீர்கள். இனி இவை என்னுடைய கவலைகள், என்னுடைய கோரிக்கைகள், என்னுடைய எதிர்பார்ப்புகள். இவற்றுக்கு தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன்.

வீட்டில் 4 குழந்தை இருந்தால் மெலிந்த குழந்தை மீதுதான் பெற்றோருக்கு அன்பு இருக்கும். அதைப் போலத்தான் மெலிந்த குழந்தைகளை முன்னேற்ற நினைக்கிறேன் என்று சொன்னார் கருணாநிதி.

அந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான், 100 நாட்களில் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்ற இந்த வாக்குறுதியாகும்.

முதுகில் ஏற்றி விட்டீர்கள்

எங்கே சென்றாலும் நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலமாக பயன்பெற்ற பெண்களை அதிகம் பார்க்க முடிகிறது. மக்களின் அரசாக - மக்கள் நல அரசாக- மக்கள் விரும்பும் அரசாக- மக்கள் கவலைகளைப் போக்கும் அரசாக- மக்கள் கனவுகாணும் அரசாக தி.மு.க. அரசு அமையும்.

இந்த அரசாங்கம்தான் வரப்போகிறது என்ற நம்பிக்கையுடன் நீங்கள் கொண்டுவந்த பாரங்களை, இப்போது என் முதுகில் ஏற்றி விட்டீர்கள். என்னை நம்பி ஏற்றி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் நம்பிக்கையுடன் செல்லுங்கள்!. தி.முக. ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் இந்த கோரிக்கையை வைத்துள்ள உங்களுக்கு நான் சொல்வது, ஆமாம்; தி.மு.க. ஆட்சிதான் அமையும்.

உங்கள் கவலைகள் யாவும் தீரும், என்ற வாக்குறுதியை மீண்டும் நான் வழங்குகிறேன்.

நம்பிக்கையுடன் இருங்கள்

உங்களுடைய அனைத்து பிரச்சினைகளும் எனக்கு புரிகிறது. உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் உங்கள் முன்னால் இந்த பெட்டியில் போட்டு சீல்' வைக்கப்பட்டுள்ளது. இதனுடைய சாவி என்னிடம்தான் இருக்கப்போகிறது. இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் தேர்தல் நடக்கப்போகிறது. தேர்தல் முடிந்து, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று, நான் பதவி பிரமாணம் எடுத்த அடுத்த நாள் இந்த பெட்டியை நானே திறப்பேன்.

இந்த மனுக்கள் அனைத்தும், ஏற்கனவே நான் சொன்னதுபோல, இதற்கென தனி பிரிவு அமைக்கப்பட்டு, இந்த அடிப்படை பிரச்சினைகள் அனைத்தையும் முன்னுரிமை கொடுத்து தீர்த்து வைப்பேன்.

கவலைப்படாதீர்கள். நான் கருணாநிதியின் மகன் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நம்பிக்கையோடு இருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.