சென்னை,
சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். திமுக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ரஜினிகாந்த்தான் காரணம் என தகவல் பரவிய நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசுகையில், ’தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மு.க. ஸ்டாலினை சந்தித்ததைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. நான் பதிலளிக்காமல் இருந்தால் அது உண்மையாகி விடும். மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்றது எனக்கு வருத்தமாக இருந்தது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அவருக்கும் எனக்கு 38-40 ஆண்டுகால நட்பு உள்ளது. அவரை நட்பு ரீதியாகவே சந்தித்தேன். விஜய் முதல்-அமைச்சர் ஆகக் கூடாது என தடுக்க ரஜினி முயன்றார். இரு பெரிய கட்சிகள் கூட்டணிக்கு பேசினார் என்றெல்லாம் விமர்சிக்கிறார்கள். அப்படி பேசக்கூடிய தரம்கெட்ட ஆள் இந்த ரஜினிகாந்த் இல்லை.
விஜய் முதல்-அமைச்சராவதில் எனக்கு எந்தப் பொறாமையும் இல்லை. அவர் வெற்றி பெற்றதில் எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி உள்ளது. கமல் முதல்-அமைச்சராகி இருந்தால் கூட நான் பொறாமைப்பட்டிருப்பேன். எனக்கும் விஜய்க்கும் 28 வயது வித்தியாசம் உள்ளது.
மக்கள் மாற்றம் வேண்டும் என நினைத்த சமயத்தில் விஜய் வந்துள்ளார். விஜய்க்கு 100 சதவிகிதம் சினிமா புகழ் கை கொடுத்துள்ளது. விஜய் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது. எம்.ஜி.ஆர்., என்.டி.ஆரை விட பெரிய வெற்றியை விஜய் பெற்றுள்ளார்.
தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் என்ன தப்பு பண்ணாலும், அது நேரடியாக விஜய்க்குதான் பாதிப்பு என உணரணும்” என்று கூறினார்.