திருவாரூர்,
த.வெ.க.வின் 3-வது ஆண்டு தொடக்க விழா கடந்த பிப்ரவரி மாதம் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் பாடகர் வேல்முருகன் கலந்து கொண்டு பாடல்களை பாடினார். அப்போது விஜய்யை புகழும் வகையில் முருகப்பெருமானின் பக்திப்பாடலில் சில வரிகளை வேல்முருகன் மாற்றி பாடியதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், பாடகர் வேல்முருகன் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“த.வெ.க.வின் நிகழ்ச்சியில் பாடல் பாடுவதற்காக என்னை அழைத்தார்கள். அப்படி பாடப் போனபோதுதான், முருகப்பெருமானே வந்து விஜய் வெற்றி வாகை சூடுவார் என என்னை பாட வைத்தார். நான் எங்குமே அவ்வாறு வரிகளை மாற்றிப் பாடியது இல்லை. முதல் முறையாக அவருக்காக மாற்றிப் பாடினேன். அதன்படியே விஜய் வெற்றி பெற்று முதல்-அமைச்சராகி விட்டார். நான் பாடவில்லை, முருகப்பெருமான் தான் என்னை பாட வைத்தார்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.