தமிழக செய்திகள்

எங்கள் வெற்றியை நான் கர்த்தரிடம் ஒப்படைக்கிறேன் - சீமான்

ஏற்கனவே முருகனிடம் பேசிவிட்டு தான் வந்துள்ளேன் என சீமான் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி,

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நீங்கள் யாரும் என்னுடைய கட்சியின் சார்பில் போட்டியிடும் எனது சகோதர சகோதரிகளுக்கு ஓட்டு போட வேண்டாம். ஆனால் தேவாலயத்திற்கு ஜெபிக்க செல்லும் போது நாம் தமிழர் கட்சியினர் ரொம்ப நாட்களாக கத்திக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் வெல்ல வேண்டும் என ஒரு நிமிடம் கர்த்தரிடம் ஜெபித்துக் கொள்ளுங்கள்.

இதேபோல பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்லும் எனது சொந்தங்கள் அல்லாஹ்விடம் நீங்கள் யாரும் சீமானுக்கோ அல்லது அவனுடைய பிள்ளைகளுக்கோ ஓட்டு போடபோவதில்லை. கருணாநிதிக்கோ அல்லது காங்கிரசுக்கோ தான் வாக்களிப்பீர்கள். ஆனால், பாவம் 15 வருடமாக இந்த சீமான் பேசிக்கொண்டு இருக்கிறான். கடந்த பத்து வருட காலமாக தெரு தெருவாக கத்திக் கொண்டு இருக்கிறான். இந்த பிள்ளை வெற்றி பெற வேண்டும் என ஒரு வினாடி தொழுகை செய்யுங்கள். ஓட்டு எனக்கு போடவேண்டாம். என்னுடைய வெற்றியை கர்த்தர் மற்றும் அல்லாஹ்விடம் ஒப்படைத்துக் கொள்கிறேன். ஏற்கனவே முருகனிடம் பேசிவிட்டு தான் வந்துள்ளேன். உன்னுடைய பேரனை வெற்றி பெறச் செய்யாமல் நீ இந்த நாட்டு மக்களுக்கு என்ன செய்ய போகிறாய் என்று முருகனிடம் கேட்டுள்ளேன் என்றார்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்