சென்னை,
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, இன்று சென்னை திரும்பிய நிலையில் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நேற்று முன்தினம் நிறைவடைந்த நார்வே செஸ் தொடரில், உலகின் முன்னணி வீரர்களை பின்னுக்குத் தள்ளி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் நிகழ்த்தினார். 20 வயதான பிரக்ஞானந்தா, இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தி பட்டத்தை உறுதி செய்தார்.
சாம்பியன் பட்டத்துடன் இன்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த பிரக்ஞானந்தா, அவரது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பெற்றார்.
வாழ்த்து பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரக்ஞானந்தா கூறியதாவது:
"சமீபத்தில் நடைபெற்ற நார்வே செஸ் தொடரில் நான் சாம்பியன் பட்டம் வென்றிருந்தேன். அதற்காக முதல்-அமைச்சர் விஜய் சார் என்னை அழைத்திருந்தார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவருடன் செஸ் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. அதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
தொடர் முடிந்த உடனேயே என்னை அழைத்து பாராட்டியது மிகவும் சந்தோஷமாக உள்ளது. விஜய் சார் நன்றாகவே செஸ் விளையாடினார். நான் வெற்றி பெற்றாலும், அவர் இவ்வளவு நன்றாக விளையாடுவார் என்று எனக்கு தெரியாது. மேலும், எனக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கினார்" என்றார்.