சென்னை,
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியத் திரையுலகின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரும், நடிகர்கள் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரின் தந்தையாருமான, ஆர்.பி. சவுத்ரி அவர்கள், சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமது சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக, பல்வேறு மொழிகளில் சுமார் நூறு படங்களுக்கும் மேல் தயாரித்து, எண்ணற்ற கலைஞர்களையும் இயக்குநர்களையும் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். சிறந்த கதையம்சம் பொருந்திய திரைப்படங்களை தந்து, மக்களை மகிழ்வித்தவர்.
ஆர்.பி. சவுத்ரி அவர்கள் பிரிவு, இந்தியத் திரையுலகிற்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டி கொள்கிறேன் ஓம் சாந்தி.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.