சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த மே 13-ந்தேதி சட்டசபையில் நடந்தது. அப்போது, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் , கட்சியின் கொறடா உத்தரவை மீறி த.வெ.க., அரசுக்கு ஆதரவாக வாக்கு அளித்தனர். இதையடுத்து, அவர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம், அ.தி.மு.க., தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தநிலையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் மதுராந்தகம் குமரவேல் பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் மனு கொடுத்தனர். உடனடியாக த.வெ.க.வில் சேர்ந்தனர்.
இவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க., கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனு நிலுவையில் உள்ள நிலையில் இந்த 4 எம்எல்ஏ-க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். இந்த 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதிக்கவேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவுக்கு அம்பை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் இசக்கி சுப்பையா கூறியிருப்பதாவது; சொந்த விருப்பத்தில் மனப்பூர்வமாக ராஜினாமா செய்தேன். கட்சி மீதான நம்பிக்கை இழப்பால் ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து 13 நாட்கள் கழித்து ராஜினாமா செய்தேன். தனக்கு எதிராக தகுதி நீக்க விசாரணைக்கு சபாநாயகரிடம் விளக்கம் அளித்துள்ளேன். குதிரை பேரம் என்பது வெறும் யூகம். அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.