சென்னை,
கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை ஐகோர்ட்டில் அன்பில் மகேஷ்தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அன்பில்மகேஷ் அழைத்துச்செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனை முடிந்த வெளியே வந்தபோது அன்பில்மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
”கடந்த திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டது யாருக்கு உறுத்தியது என தெரியவில்லை. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். முன்ஜாமீன் தள்ளுபடியாகி விட்டது என்ற நினைப்பில் என்னை கைது செய்துள்ளார்கள். ஏற்கெனவே நடந்த விசாரணையின்போது முழு ஒத்துழைப்பு அளித்தேன். தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்.” என்றார்.
மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்காக அன்பில் மகேஷ் தற்போது அழைத்துச்செல்லப்படுகிறார்.