சென்னை
எந்த சூழலிலும் அ.தி.மு.க.வை விட்டு போக மாட்டேன் என லீமாரோஸ் எம்.எல்.ஏ. கூறினார்.
சென்னையில் திருச்சி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் முன்னாள் முதல்-அமைச்சர் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடந்தது. இதில், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய எம்.எல்.ஏ. லீமாரோஸ், எனக்கு வாய்ப்பு கொடுத்து எம்.எல்.ஏ. ஆக்கினீர்கள். எந்த சூழலிலும் அ.தி.மு.க.வை விட்டு போக மாட்டேன். இந்த கட்சிக்காக என்றும் உண்மையாக இருப்பேன். உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என கூறினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பொறுப்பேற்று கொண்டார்.
எனினும், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, த.வெ.க.வுக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் வாக்களித்தனர். இதேபோன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. லீமா ரோஸ் வாக்களித்தது அப்போது சர்ச்சையானது.
எனினும், இதற்காக மன்னிப்பு கோரி அவர் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினார். இதனை தொடர்ந்து அவருக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.