தமிழக செய்திகள்

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன்: பிரவீன் சக்கரவர்த்தி உறுதி

தமிழ்நாட்டின் குரல் டெல்லியிலும், நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டுமென பிரவீன் சக்கரவர்த்தி கூறினார்.

சென்னை,

தமிழக சட்டமன்றத்திற்கு அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் வெற்றிப் பெற்றார். இதையடுத்து அவர் ஏற்கெனவே வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இந்த காலியிடத்துக்கான இடைத்தேர்தல் ஜுன் 18-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதில் ஆளுங்கட்சியான தவெகவின் ஆதரவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்ரவர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரவீன் சக்கரவர்த்தி, கூறியதாவது;

"மத்தியில் உள்ள மோடி அரசு, மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிராக இரண்டு, மூன்று மசோதாக்களைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மகளிர் இடஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுவரையறை (தொகுதி மாற்றம்) மசோதா, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா ஆகியவற்றைக் கொண்டுவர முயல்கிறது. இவையெல்லாம் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல்களாகும். இதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டியது அவசியம். தமிழ்நாட்டின் குரல் டெல்லியிலும், நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக நான் நாடாளுமன்றத்தில் நிச்சயம் குரல் எழுப்புவேன்."

இவ்வாறு அவர் கூறினார்.