தமிழக செய்திகள்

"நான் ஓட்டு போடுவேன்" விழிப்புணர்வு குறும்படம்: தூத்துக்குடி கலெக்டர் வெளியிட்டார்

ஒவ்வொரு வாக்காளரின் வாக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்தி, சாத்தான்குளம் இளம் முன்னோடிகள் சங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் இணைந்து விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

தூத்துக்குடி,

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட "நான் ஓட்டு போடுவேன்" என்னும் விழிப்புணர்வு குறும்படத்தைத் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் நேற்று வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வாக்காளரின் வாக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்தி, சாத்தான்குளம் இளம் முன்னோடிகள் சங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் இணைந்து விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். வேளாண்மைத் துறையில் பணியாற்றி வரும் சரத்குமார் இயக்கியுள்ள இந்த குறும்படத்தை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் விஷு மகாஜன் வெளியிட்டார்.

இந்த விழிப்புணர்வு குறும்படம் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் என மாவட்ட நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு அலுவலர் புவனேஷ்ராம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.