தமிழக செய்திகள்

அவிநாசி தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - எல்.முருகன்

பா.ஜ.க.வின் மீதான மக்களின் நம்பிக்கையால்தான் ஆம் ஆத்மி எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பா.ஜ.க.வை நோக்கி வருகின்றனர்.

சென்னை,

மத்திய இணை மந்திரியும், அவிநாசி தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான எல்.முருகன் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்குப் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்துள்ளது தோல்வி பயத்தையே காட்டுகிறது. நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் ஜனநாயக முறையில் தேர்தலைச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. தோல்வி பயத்தின் காரணமாகவே எதிர்க்கட்சிகள் இதுபோன்ற காரணங்களைத் தேடிப் பிடித்துச் செயல்படுகின்றனர்.

அவிநாசி தொகுதியில் எனக்கு 100 சதவீத வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். எங்களது வெற்றி தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் பதிவான அதிகபட்ச வாக்கு சதவீதம் குறித்து அவர் தெரிவிக்கையில், அதிகரித்துள்ள வாக்கு சதவீதம் தி.மு.க. அரசின் மீதான மக்களின் கோபத்தையும், ஆதங்கத்தையும் காட்டுகிறது. மக்கள் தி.மு.க. அரசு மீது வெறியாக இருந்ததால்தான் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இது முழுக்க முழுக்க தி.மு.க. அரசாங்கத்திற்கு எதிரான வாக்குப்பதிவு ஆகும்.

செல்வப்பெருந்தகை வீட்டின் வருமான வரிச்சோதனை குறித்து அவரும் அத்துறை அதிகாரிகள் தான் பதில் சொல்ல வேண்டும். பா.ஜ.க.வின் மீதான மக்களின் நம்பிக்கையால்தான் ஆம் ஆத்மி எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பா.ஜ.க.வை நோக்கி வருகின்றனர்.

மேலும் திராவிட மாடல் 2.0 என்பது வெறும் ‘ஜீரோ’ தான் என்றும், தி.மு.க. அரசைத் தூக்கியெறியவே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.