சென்னை,
சிலை திருட்டு தடுப்புப் பிரிவினரால் 5 குற்றவாளிகள் கைது: 3 பழங்கால சிலைகள் பறிமுதல். இதுதொடர்பாக, காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
விழுப்புரம் சரக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ரவீந்திரன் என்பவருக்கு கிடைத்த ரகசிய மற்றும் நம்பகமான தகவலின் அடிப்படையில், கடலூர் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை-36ல் உள்ள சேத்தியாத்தோப்பு கூட்ரோடு மேம்பாலம் அருகே நேற்று பிற்பகல் சுமார் 2.00 மணியளவில், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு தனிப்படை காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் நெகிழிப் பைகளுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த 5 நபர்களை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவலர்கள் மடக்கிப் பிடித்து, சோதனையிட்டு அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது மொத்தம் ரூபாய் 7 கோடி மதிப்புள்ள 3 தொன்மையான உலோக சிலைகள் கைப்பற்றப்பட்டு, சிலைகளை கடத்த முயன்ற 5 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
ஐந்து நபர்கள் வைத்திருந்த நெகிழி பைகளை சோதனையிட்டு பறிமுதல் செய்த மூன்று பழங்கால உலோக சிலைகளின் விவரம்:
(i) பூதேவி சிலை. (56 செ.மீ உயரம் 19 கி.கி)
(ii) திருஞானசம்பந்தர் சிலை. (37 செ.மீ உயரம் -10 கி.கி)
(iii) சிவகாமி சுந்தரி சிலை, (55 செ.மீ உயரம் 12.40 கி.கி)
மேலும் சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணையில், சிலைகளை வாங்குபவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது. உலோகத்தில் தங்கத்தின் தூய்மையை பரிசோதிப்பதற்காக சிலைகளின் சில பகுதிகளை வெட்டி சேதப்படுத்தியது தெரியவந்தது. கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு பயணிக்கும் ஒரு நபரிடம் சிலைகளை ஒப்படைப்பதற்காக ஐந்து நபர்களும் அவ்விடத்தில் காத்திருந்தபோது சிலை திருட்டு தடுப்பு பிரிவு தனிப்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு:
(1) ராஜலிங்கம் (வயது-38), திருநாரையூர்,
(2) முத்துராஜ் (வயது-40), வடக்கு கொளக்குடி,
(3) ராஜவேல் (வயது-50), திருச்சின்னபுரம்,
(4) செந்தில்குமார் (வயது-49), திருச்சின்னபுரம்.
(5) சுரேஷ் (வயது-34), வடலூர், குறிஞ்சிப்பாடி தாலுகா.
இச்சம்பவம் குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்நிலைய குற்ற எண்.08/2026 சட்டபிரிவு 35(1)(e), 106 பாரதிய நியாய சன்ஹிதா இணைந்த 305(d) பாரதிய நியாய சன்ஹிதா பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையுடன் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்களை சென்னை, எழும்பூரில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அனைத்து எதிரிகளையும் 14.08.2026 வரை நீதித்துறை காவலில் வைத்திடவும். எதிரிகள் அனைவரையும் சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்திட உத்தரவிடப்பட்டது. கைப்பற்றப்பட்ட சிலைகள் எந்த கோயிலை சேர்ந்தவை என்பதை கண்டறியவும். இதன் பின்னணியில் உள்ள திருட்டு வலையமைப்பை கண்டறியவும் வேலூர் சரக ஆய்வாளர் முனியம்மாள் என்பவர் புலன்விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிலை திருட்டு தடுப்புப் பிரிவு தனிப்படையினரின் இச்சிறப்பான நடவடிக்கையையும் உடனடி செயல்பாட்டையும் சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் கல்பனா நாயக், சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர் அனில் குமார் கிரி, மற்றும் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர்கள் வெகுவாக பாராட்டினார்கள். தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர். மகேஷ் குமார் அகர்வால், சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் முழு குழுவையும் அதிகாரிகளையும் வெகுவாக பாராட்டினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.