செஞ்சி,
செஞ்சி சிறுமி மாயமாகி 42 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை. அவளை யாராவது கடத்தி இருந்தால் கோவிலில் கொண்டு வந்து விட்டு செல்லுங்கள் என்று சிறுமியின் தாய் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி பவானி. இவர்களது 2-வது மகள் ஹேமலதா (வயது 7), கடந்த மாதம் 11-ந்தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினாள். மறுநாள் அதிகாலையில் அவள் மாயமானாள். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சிறுமி ஹேமலதாவையும் தேடி வருகிறார்கள். 42 நாட்கள் ஆகியும் சிறுமி கிடைக்கவில்லை. மேலும் இந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வரு கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் சிறுமியின் தாய் பவானி கண்கலங்கியபடி பேசிய வீடியோ ஒன்று நேற்று வெளியாகி உள்ளது. அதில் அவர் பேசி இருப்பதாவது:-
எனது மகள் மாயமாகி இன்றுடன் 42 நாட்கள் கடந்து விட்டது. அவள் சாப்பிட்டாளா?, என்ன செய்கிறாள்? என்று கூட எங்களுக்கு தெரியவில்லை. மகள் பற்றிய எந்த தகவலும் தெரியாமல் நாங்கள் அனைவரும் பசியோடும் பட்டினியோடும் காத்துக் கொண்டிருக்கிறோம். எனது மகளை எப்படியாவது கண்டு பிடித்து தாருங்கள்.
எனது மகளை யாராவது கடத்தி சென்று இருந்தால் அவர்களிடம் நான் கையெடுத்து கும்பிட்டு வேண்டி கேட்டுக்கொள்கிறேன். எனது மகளை என்னிடம் கொண்டு வந்து ஒப்படைத்து விடுங்கள். என்னிடம் கொடுக்க முடியாவிட்டாலும் ஏதாவது ஒரு கோவிலில் கொண்டு வந்து விட்டு சென்று விடுங்கள். அங்குள்ளவர்கள் எனது மகளை பார்த்து எங்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். இவ்வாறு அவர் பேசி உள்ளார்.