தமிழக செய்திகள்

தவெக ஆட்சியை திமுக விமர்சிக்கிறது என்றால்... நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி

முதல்-அமைச்சர் விஜய்க்கு மக்கள் சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கூறினார்.

கோவை,

கோவை விமான நிலையத்தில் நடிகை கஸ்தூரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

த.வெ.க. ஆட்சியை தி.மு.க. விமர்சிக்கிறது என்றால், முதல்-அமைச்சர் விஜய் நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறார் என்பதற்கான அறிகுறி என எடுத்துக் கொள்ளலாம். டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது நல்ல விஷயம். குடிபோதையில் இருப்பவர்கள் தெருக்களையே பார்களாக மாற்றி உள்ளனர்.

மேலும் முதல்-அமைச்சர் விஜய்க்கு மக்கள் சிறிது கால அவகாசம் கொடுத்து ஆதரவு அளிக்க வேண்டும். அதிகாரிகள் மாறக்கூடும். பலர் புதிய எம்.எல்.ஏ.க்கள். அவர்கள் விரைவில் கற்றுக் கொள்வார்கள். பாட்டிலுக்கு 10 ரூபாய் என பாடிய நிலையில் 10 ரூபாய் தொடர்கிறது என்றால் அடிமட்ட அதிகாரிகள் மாறுவது கடினம். அது தொடர்பான கட்டமைப்பு குறித்து முதல்-அமைச்சர் விஜய்க்கு தெரிந்து இருக்காது.

தி.மு.க.வினர் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தவர்கள். அவர்கள் 5 ஆண்டுகள் கத்திக் கொண்டே இருக்கலாம். அதேபோல் சிலர் மாற்றுக்கட்சிகளுக்கு செல்வது புதிதல்ல. அ.தி.மு.க. வெற்றி பெற்ற காலத்திலும் பலர் கட்சி மாறினர். இது அரசியலின் ஒரு பகுதிதான்.

மத்திய அரசை எதிர்த்து முதல்-அமைச்சர் விஜய் அரசியல் செய்வார் என நினைக்க வில்லை. கொள்கை எதிரி என தெரிவித்தாலும் கொள்கையில் என்ன இருக்கு. மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது கொள்கை என்றால் முதல்-அமைச்சர் விஜய் அதை வேண்டாம் என்றா சொல்ல போகிறார். இவ்வாறு அவர் கூறினார்.