தமிழக செய்திகள்

“பதவி உயர்வு, இடமாறுதலுக்கு அரசியல் செல்வாக்கை பயன்படுத்தினால்..” - அரசு விடுத்த எச்சரிக்கை

அதிகாரப்பூர்வமற்ற வழிமுறைகள் மூலம் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிப்பது அனுமதிக்கப்படாது.

சென்னை,

பதவி உயர்வு, இடமாறுதலுக்கு அரசியல் செல்வாக்கை பயன்படுத்தும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடும் எச்சரிக்கை

அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற முனைப்பில் தமிழக அரசு தீவிரமாகக் களமிறங்கி உள்ளது. இந்த நிலையில், தற்போது தமிழக அரசு ஊழியர்கள் பதவி உயர்வு, பணியிட மாறுதல் உள்ளிட்ட சலுகைகளைப் பெறுவதற்காக அரசியல் பிரமுகர்களின் சிபாரிசை நாடக் கூடாது என்று தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசுப் பணியாளர்கள் தங்களது பணிசார்ந்த கோரிக்கைகளுக்கு அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தினால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாகச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அரசியல் செல்வாக்கு

அதில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் பல்வேறு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் சில அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தங்களது பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் இதர தனிப்பட்ட கோரிக்கைகளுக்கு உரிய நிர்வாக வழிமுறைகளைப் பின்பற்றாமல், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் நேரடியாக விண்ணப்பித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகள். 1973-ன் விதி 18-ன்படி, அரசு ஊழியர்கள் தங்களது பணிசார்ந்த விவகாரங்களில் சாதகமான ஆணைகளை பெறுவதற்காகவோ அல்லது சலுகைகளை பெறுவதற்காகவோ, எவ்வித வெளிச்செல்வாக்கையோ அல்லது அரசியல் செல்வாக்கையோ பயன்படுத்தக்கூடாது.

ஒழுங்கு நடவடிக்கை

மேலும், அரசுப் பணியாளர்கள் தங்களது குறைகளை உயரதிகாரிகளிடம் தெரிவிக்கும்போது, உரிய அதிகாரப்பூர்வ வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதுபோன்ற நேரடி விண்ணப்பங்கள் அல்லது அதிகாரப்பூர்வமற்ற வழிமுறைகள் மூலம் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிப்பது அனுமதிக்கப்படாது.

இந்த விதிகளை மீறிச் செயல்படுவது நடத்தை விதிமீறலாகக் கருதப்படும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைத்து அலுவலகத் தலைவர்களும் தங்களது கட்டுப்பாட்டில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த அறிவுறுத்தலைத் தெரிவித்து. அவர்கள் விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அரசு ஊழியர்கள் கம்ப்யூட்டர், இருசக்கர வாகனம் மற்றும் கார் வாங்குவதற்கான முன்பணம் பெறுவதற்கு குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. அந்த நிபந்தனையை தமிழக அரசு தளர்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT