சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகள் பரபரப்பாக நடந்து வரும் வேளையில், தமிழக அரசின் கீழ் இயங்கும் 181 அரசு கலைக் கல்லூரிகளில் 43 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது.
இத்தனைக்கும் கடந்த 18-ஆம் தேதியுடன் அரசுக் கலைக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வை நிறைவு செய்ய வேண்டும் என அரசு தெரிவித்திருந்த நிலையில், இடங்கள் நிரம்பாததால் மேலும் சில நாட்களுக்கு கலந்தாய்வை நீட்டித்தும் கூட, பாதி இடங்கள் தான் நிரம்பியுள்ளன என்பது உயர்கல்வித் துறையின் உண்மை லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆயிரக்கணக்கில் செலவானாலும் பரவாயில்லை என மக்கள் அரசு கல்லூரிகளை புறக்கணித்து விட்டு, தனியார் கல்லூரிகளை நாடுவது ஆளும் அரசுக்கு வெட்கக்கேடு.
அதுசரி, அடிப்படை வசதிகளின்றி முடங்கிக் கிடக்கும் அரசு கல்லூரிகளை உடனடியாக ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டிய உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், நட்ட நடு ரோட்டில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தால் துறை எப்படி உருப்படும்? அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்படி நடக்கும்?
ஏற்கனவே திமுக ஆட்சியில் அதல பாதாளத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்த உயர்கல்வித் துறையை, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக தமிழக அரசவையில் இடம் கிடைக்காமல் “கோமா”வில் கிடந்த காங்கிரஸிடம் தூக்கிக் கொடுத்த முதல்-அமைச்சர் விஜய், காங்கிரஸ் அமைச்சரின் செயல்பாடுகளையும் சற்று கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்! இல்லையெனில் நமது பிள்ளைகளின் எதிர்காலம் மொத்தமாகப் பாழாகிவிடும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.