சென்னை,
போராடும் விவசாயிகளை ஒடுக்கிவிட்டால், பிரச்சினைகள் தீர்ந்து விடுமா முதல்-அமைச்சரே? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த இருங்களூர் அருகே, தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதியின் படி பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி, அமைதியான வழியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற 252 விவசாயிகளை உங்கள் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டீர்கள், ஆனால் அந்த அநியாயத்தை தட்டிக் கேட்பவர்களை மட்டும் தடாலடியாக கைது செய்வீர்களா? என்ன விதமான பாசிஸப் போக்கு இது? உங்கள் நிர்வாகத் திறனின்மையை மறைக்க, போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது தான் மாற்று அரசியலா? பதில் கூறுங்கள் முதல்-அமைச்சரே?
அடுத்த ஜென்மத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறக்க வேண்டுமென மேடைகளில் வசனம் பேசிக் கொண்டு, 'உண்டி கொடுக்கும்' விவசாயப் பெருமக்களை மனசாட்சிக்குத் தெரிந்தே இப்படி வஞ்சிக்கும் உங்களை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.