சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில், கருத்து கணிப்புகளை தவிடுபொடியாக்கி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.
ஆட்சி அமைக்கும் வகையில் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களில், த.வெ.க.வுக்கு 108 இடங்கள் கிடைத்துள்ளன. அதேபோல், தி.மு.க. கூட்டணிக்கு 73 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 53 இடங்களும் கிடைத்துள்ளன. த.வெ.க. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றால், இன்னும் 12 உறுப்பினர்களின் ஆதரவு த.வெ.க.வுக்கு தேவை. அதற்காக, த.வெ.க. தலைவர் விஜய் தரப்பில் இருந்து அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கேட்டதாக தகவல்கள் வெளியாகின.
அவ்வாறு பிற கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுக்கும் பட்சத்தில், ஆட்சி அதிகாரத்திலும் பங்கு கேட்கும். இதை த.வெ.க.வால் தவிர்க்க முடியாது. பெரும்பான்மை கிடைப்பதற்காக, பிற கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்தால், த.வெ.க.வால் தனித்து இயங்க முடியாது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழகத்தில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கவர்னர் ஆர்.வி.அர்லேகருக்கு த.வெ.க. தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். மேலும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 2 வார காலம் அவகாசமும் கேட்டுள்ளார்.
இந்த நிலையில், ஆட்சியமைக்க த.வெ.க. எந்தக் கட்சிகளின் ஆதரவை பெறும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கும் சூழ்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய், கெஜ்ரிவால் பாணியை கையில் எடுப்பார் என தெரிகிறது.
அதாவது, 2012-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியை தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால், 2013-ம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. ஆனால், ஜன லோக்பால் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்ற முடியாமல் போனதால், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். அதாவது, ஆட்சியமைத்து 49 நாட்களிலேயே ஆம் ஆத்மி அரசு கலைந்துபோனது.
அதன்பிறகு, 2015-ம் ஆண்டு மீண்டும் டெல்லியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட்டு, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அதாவது, மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றி அசத்தியது. எனவே, இதுபோன்ற நிலையையே த.வெ.க. தலைவர் விஜய்யும் இப்போது கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது, "யாரும் நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தால், அதை ஏற்றுக்கொள்ளலாம் என்றும், நிபந்தனையுடன் ஆதரவு கரம் நீட்ட வந்தால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம்" என்றும் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேசியதாக கூறப்படுகிறது. "தமிழக மக்கள் நம்மை நம்பி இந்த அளவுக்கு வெற்றியை கொடுத்திருக்கிறார்கள். எனவே, தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வந்தாலும், இதைவிட அதிக இடங்கள் நமக்கு கிடைக்கும்" என்று நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேசியதாக தெரிகிறது.
எனவே, ஆதரவுக்கரம் நீட்ட வரும் கட்சிகளை த.வெ.க. தலைவர் விஜய் அரவணைத்துக் கொள்வாரா?, அல்லது கெஜ்ரிவால் பாணியில் மீண்டும் தேர்தலை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிப்பாரா? என்பது அவருடைய அடுத்தடுத்த அரசியல் நடவடிக்கையில்தான் தெரியவரும்.