தமிழக செய்திகள்

சபரிமலைக்கு செல்ல தவறினால் மீண்டும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாது - தேவஸ்தானம் அறிவிப்பு

பம்பையில் செயல்பட்டு வந்த உடனடி தரிசன முன்பதிவு மையம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து விட்டு செல்ல தவறினால் மீண்டும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாது என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மொத்தமாக முன்பதிவு

சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களில் பாதி பேர் மட்டுமே தரிசனத்திற்கு வருவதாக கூறப்படுகிறது. சில சுற்றுலா நிறுவனங்கள் அல்லது முகவர்கள் மொத்தமாக முன்பதிவு செய்து விட்டு அவற்றை ரத்து செய்யாமல் விட்டு விடுகிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து முறையாக விசாரணை நடத்த தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார், ஏ.டி.ஜி.பி. விஜயன் ஆகியோருக்கு தேவஸ்தானத்துறை மந்திரி முரளிதரன் உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஆன்லைன் முன்பதிவில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆன்லைன் முன்பதிவில் வருகிற 30-ந் தேதி வரை தினசரி எண்ணிக்கையில் கூடுதலாக 5 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஓ.டி.பி. முக்கியம்

போலி முன்பதிவுகளைத் தடுக்கவும், மொத்தமாக முன்பதிவு செய்வதை தடுக்கவும் ஆதார் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி.-ஐ உள்ளீடு செய்தால் மட்டுமே இனிமேல் முன்பதிவு செய்ய முடியும்.

ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு, குறிப்பிட்ட நாளில் தரிசனத்திற்கு வராத பக்தர்கள் இந்த சீசனில் மீண்டும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாது. ஆனால் இவர்கள் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்யலாம்.

குறிப்பிட்ட நாளில் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், தரிசன நாளுக்கு முன்பாகவே முன்பதிவை ரத்து செய்யவோ அல்லது தேதி மாற்றம் செய்யவோ வசதி செய்யப்பட்டுள்ளது. பம்பையில் செயல்பட்டு வந்த உடனடி தரிசன முன்பதிவு மையம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போலீஸ் சார்பில் உதவி மையம்

இது போல் பத்தனம்திட்டா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சபரிமலை மண்டல. மகரவிளக்கு சீசனையொட்டி அய்யப்ப பக்தர்களுக்கு உதவி மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்க கேரள போலீஸ்துறை சார்பில் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையம் 24 மணி நேரமும் செயல்படும்.

இந்த மையத்தை கேரள மாநிலத்திற்குள் இருக்கும் பக்தர்கள் 14432 என்ற எண்ணிலும், கேரள மாநிலத்திற்கு வெளியே இருப்பவர்கள் 04735-14432 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி மையத்தின் மூலம் காணாமல் போனவர்களைக் கண்டறிதல், சாலை விபத்துகள் தொடர்பான உதவிகள், வாகனப் பழுதுகளைச் சரிசெய்வதற்கான உதவிகள், அவசர மருத்துவ உதவி போன்றவை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT