தமிழக செய்திகள்

“அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால்..” - அரசு எச்சரிக்கை

அரசு விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இன்று (30.10.2026) ரூ.200-க்கு 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு விற்பனையை கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் தொடங்கி வைத்தார்.

சிறப்பு மளிகைத் தொகுப்பு

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் வ. காந்திராஜ் இன்று (30.10.2026) 293, ஜி.என்.டி. சாலை, செங்குன்றம், சென்னை-600 052 என்ற முகவரியில் அமைந்துள்ள சைதாப்பேட்டை கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மருதம் கூட்டுறவு சிறப்பங்காடி (சுயசேவைப் பிரிவு) விற்பனை நிலையத்தில் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய “சிறப்பு மளிகைத் தொகுப்பு” விற்பனையை 100 பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

இன்றும், நாளையும்

10 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய இத்தொகுப்பு, ஒரு தொகுப்பு ரூ.200/- என்ற விலையில், மாநகராட்சிகள் அல்லாத பகுதிகளில் செயல்படும் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், தொடக்கக் கூட்டுறவுப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் 128 விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் கடலைப் பருப்பு 250 கிராம், பாசிப் பருப்பு 250 கிராம், காய்ந்த மிளகாய் 100 கிராம், மல்லி விதை 150 கிராம், பூண்டு 150 கிராம், புளி 250 கிராம், கடுகு 100 கிராம், உடைத்த உளுந்தம் பருப்பு 100 கிராம், சீரகம் 50 கிராம் மற்றும் சோம்பு 50 கிராம் என மொத்தம் 1,450 கிராம் எடையிலான 10 பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், தருமபுரி, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, நாகப்பட்டினம், விழுப்புரம் ஆகிய இடங்களிலும் இன்று (30.10.2026) முதல் சிறப்பு விற்பனை தொடங்கப்படவுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இன்றும் நாளையும் சிறப்புத் தொகுப்பு விற்பனை தொடங்கி வைக்கப்படும்.

விலை கண்காணிப்பு நடவடிக்கைகள்

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளின் விவரம் கீழ்காணுமாறு:-

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் விலை கண்காணிப்புப் பிரிவு, 67 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை தினசரி அடிப்படையில் கண்காணித்து வருகிறது. விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கண்டறிந்து, உரிய நேரத்தில் தலையீடு செய்வதற்குத் தேவையான தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்வது இப்பிரிவின் முக்கியப் பணியாகும்.

மேலும், சந்தை நிலவரங்களை ஆய்வு செய்தல், விலை மாற்றங்களைக் கண்காணித்தல் மற்றும் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளைத் தீர்மானித்தல் ஆகியவற்றிற்காக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தலைமையில் காலாண்டு ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் தேவைப்படும் நேர்வுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் விலை கண்காணிப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்ட அளவில் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பதுக்கலைத் தடுக்க, மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்களின் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் சார்பதிவாளர், புள்ளியியல் துறை ஆய்வாளர் மற்றும் சிறப்பு வருவாய் ஆய்வாளர் ஆகியோரைக் கொண்டு மாவட்ட அளவிலான விலை கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 12.10.2026 அன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு,

விலைகளை நிலைப்படுத்தவும் நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மானிய விலையில் வெங்காயம் விற்பனை

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்யவும் NAFED மற்றும் NCCF ஆகிய ஒன்றிய அரசு நிறுவனங்களை தொடர்புகொண்டு, அந்நிறுவனங்கள் மூலம் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, 03.09.2026 முதல் நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் நியாயவிலைக் கடைகள் மூலம் கிலோ ஒன்றுக்கு ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெளிச் சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.65 ஆக உயர்ந்திருந்த நிலையில், இதுவரை 2,380 மெட்ரிக் டன்னுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், வெங்காயம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மண்டிகள் மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சன்ன ரக அரிசி விற்பனை

வெளிச்சந்தையில் அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.75 முதல் ரூ.85 வரை உயர்ந்திருந்ததைக் கருத்தில் கொண்டு, சன்னரக அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 16.10.2026 அன்று சன்ன ரக அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ.30/- என்ற விலையில் விற்பனை செய்ய அரசு அறிவித்தது. முதற்கட்டமாக, சுமார் 25,000 மெட்ரிக் டன் சன்ன ரக அரிசி விநியோகத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அரிசி 201 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் 49 அமுதம் பல்பொருள் அங்காடிகள் என மொத்தம் 250 கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விற்பனை 17.10.2026 அன்று சென்னையில் உள்ள காமதேனு பல்பொருள் அங்காடியில் (TUCS) உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ என அரிசி 29.10.2026 நிலவரப்படி, சுமார் 114.8 மெட்ரிக் டன் சன்ன ரக அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம்

சந்தையில் நிலவும் விலைகளை விடக் குறைவான விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில், அரசு பின்வரும் பொருள்களின் விலையை நிர்ணயித்துள்ளது. புழுங்கல் பொன்னி அரிசி (சன்ன ரகம்) – கிலோ ரூ.60, துவரம் பருப்பு – கிலோ ரூ.130, உளுந்தம் பருப்பு – கிலோ ரூ.140, பூண்டு – கிலோ ரூ.240, மல்லி விதை (தனியா) – கிலோ ரூ.240, காய்ந்த மிளகாய் – கிலோ ரூ.330. கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் 29.10.2026 வரை 2.30 மெட்ரிக் டன் துவரம் பருப்பு, 11.28 மெட்ரிக் டன் புழுங்கல் பொன்னி அரிசி (சன்ன ரகம்), 2.35 மெட்ரிக் டன் உளுந்தம் பருப்பு 0.54 மெட்ரிக் டன் பூண்டு, 1.01 மெட்ரிக் டன் மல்லி விதை (தனியா) 1.24 மெட்ரிக் டன் காய்ந்த மிளகாய் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 30.10.2026 முதல் மாநகராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களில் 6 மளிகைப் பொருட்களும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் விலையில் இருந்து மேலும் 10% விலை குறைக்கப்படுகிறது. 30.10.2026 முதல் புழுங்கல் பொன்னி அரிசி (சன்ன ரகம்) – கிலோ ரூ.54, துவரம் பருப்பு – கிலோ ரூ.117, உளுந்தம் பருப்பு – கிலோ ரூ.126, பூண்டு – கிலோ ரூ.216, மல்லி விதை (தனியா) – கிலோ ரூ.216, காய்ந்த மிளகாய் – கிலோ ரூ.297-க்கும் விற்பனை செய்யப்படும்.

இந்த அத்தியாவசியப் பொருட்கள் அமுதம் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

துவரம் பருப்பு விற்பனை

பருப்பு வகைகளின் விலை உயர்விலிருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், வெளிச்சந்தையில் கிலோ ஒன்றுக்கு ரூ.170 முதல் ரூ.190 வரை விற்பனை செய்யப்படும் துவரம் பருப்பை, 250 அமுதம் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் கிலோ ஒன்றுக்கு ரூ.130 என்ற மானிய விலையில் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக, NAFED நிறுவனம் மூலம் 500 மெட்ரிக் டன் துவரம் பருப்பைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொது விநியோகத் திட்டத்தின் (PDS) மூலம் தடையற்ற விநியோகம்

பொது விநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி தடையின்றிக் கிடைப்பதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்து வருகிறது. மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு வகைகளின் இருப்பு உறுதி செய்யப்பட்டு, அவற்றின் தொடர்ச்சியான விநியோகத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் மூலம் சுமார் 2.29 கோடி குடும்ப அட்டைகளைக் கொண்ட 7.01 கோடி பயனாளிகள் பயன்பெறுகின்றனர்.

கள்ளச்சந்தை விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகள்

அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குதல் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதைத் தடுப்பதற்கும், பொதுமக்களுக்கு அவை நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

(அ) அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குதல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

(ஆ) அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பொருட்கள் பதுக்கப்படுவதையும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதையும் கண்காணித்துத் தடுக்க, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை (CSCID) அதிகாரிகள் மற்றும் அமலாக்கக் குழுக்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

(இ) அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பாக உரிய கட்டுப்பாட்டு ஆணையை வெளியிடுமாறு நுகர்வோர் விவகாரத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ.200-க்கு வழங்கப்படும் சிறப்பு மளிகைத் தொகுப்பைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT