தமிழக செய்திகள்

மாமல்லபுரத்தில் இன்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி - த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்பு

அழைப்பிதழ் பெற்றிருப்பவர்களை தவிர வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இன்று, மாலை, நடைபெறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“இஸ்லாமிய சொந்தங்களின் புனிதத் திருநாளான ரமலான் திருநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, இன்று (18.03.2026, புதன்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சி, தேர்தல் ஆணையத்தின் முறையான அனுமதி பெற்று, உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. மேலும் 1,000 பேர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் பெற்றிருப்பவர்களை தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை.

அழைப்பிதழ் இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால், அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அழைப்பிதழ் பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.