தமிழக செய்திகள்

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக ஐ.ஜி. துரை குமார் நியமனம்

லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவி காலியாக உள்ள நிலையில், அப்பொறுப்பை ஐ.ஜி. துரை குமார் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதற்கிடையே சில அரசு அதிகாரிகள், ஆளும் கட்சிக்கு சாதகமாக இருப்பதாக அ.தி.மு.க., பா.ஜனதா, த.வெ.க. போன்ற கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. அதைத் தொடர்ந்து தமிழகத்தின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு வருகிறது. தமிழகத்தின் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட பல அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் பதவி காலியாக இருந்த சூழலில், தற்போது அந்தப் பொறுப்பை கவனிப்பதற்கான புதிய அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி-யாக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் தலையீட்டால் சந்தீப் மிட்டலின் நியமனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பணியிடம் காலியாகவே இருந்து வந்தது.

இந்த சூழலில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன் நேற்று (ஏப்ரல் 11, 2026) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி-யாக (SIC-I) பணியாற்றி வரும் ஏ.டி. துரை குமார் ஐபிஎஸ் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அல்லது ஒரு நிரந்தர அதிகாரி நியமிக்கப்படும் வரை, ஐ.ஜி. துரை குமார் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பை முழுமையாகக் கவனிப்பார். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.