சென்னை,
மனிதனின் முழு ஆயுட்காலத்தையும் உள்ளடக்கி, உயிரிழந்த 100-க்கும் மேற்பட்ட மனித மூளைகளின் உயர் தெளிவுத்திறன் கொண்ட முப்பரிமாண டிஜிட்டல் வரைபடங்களை சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம் உருவாக்க உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11-ந்தேதி(நேற்று) சென்னை வந்திருந்தபோது, இந்த மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்ததோடு, இஸ்கிமிக் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மனித மூளையின் உலகின் முதல் முப்பரிமாண ‘சி-ஸ்ட்ரோக்' வரைபடத்தை வெளியிட்டார்.
இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ‘சி-ஸ்ட்ரோக்’ என்பது கருப்பருவம் முதல் முதுமை வரையிலான வளர்ச்சி நிலைகளையும், நரம்பியல் கோளாறுகளையும் உள்ளடக்கி, முழு மூளையின் முப்பரிமாண வரைபடங்களை உருவாக்கும் முயற்சியாகும்.
இந்த வரைபடத் தொகுப்பு, 1,000-க்கும் மேற்பட்ட விளக்கக் குறிப்புகளுடன் கூடிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. இது, இறப்பிற்கு முந்தைய எம்.ஆர்.ஐ. ஸ்கேன்களை மில்லிமீட்டர் அளவிலான தெளிவுத்திறனிலும், திசுவியல்(Histological) படங்களை மைக்ரான் அளவிலான தெளிவுத்திறனிலும் இணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.