தமிழக செய்திகள்

தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோதமான அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

போராடும் உரிமையை நசுக்குகின்ற தமிழ்நாடு காவல்துறையின் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- ஜனநாயக உரிமைகளை நசுக்கும் தமிழ்நாடு காவல்துறையின் சட்டவிரோதமான அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

நீட் தேர்வு செய்யப்பட வேண்டும்

மத்திய பாஜக அரசு அமலாக்கி வரும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். நீட்தேர்வு வினாத்தாள் கசிவிற்கு காரணமான மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். தேசிய தேர்வு முகமை மூலம் தேர்வுகள் நடத்தப்படக் கூடாது. நீட் தேர்வால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, தலைநகர் டெல்லியில் அறவழிப் போராட்டம் நடந்து வருகிறது.

சோனம் வாங்சுக் கைது

சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் ஊர்வலம் நடத்திட முயற்சித்தனர். அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மாணவிகள் மீது மிகவும் கீழ்த்தரமான அணுகுமுறையை காவல்துறையினரும், துணைநிலை ராணுவ வீரர்களும் கையாண்டுள்ளனர். இவை அனைத்தும் வீடியோக்களாக வெளிவந்துள்ளன.

அடக்குமுறை

நெஞ்சம் பதைபதைக்கும் மத்திய பாஜக அரசின் மிக மோசமான இந்த அடக்குமுறையை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. நேற்று முன்தினம் முதல் சென்னையில் ஓரிடத்தில் அமர்ந்து போராட வழியில்லாமல், இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழ்நாடு காவல்துறையால் அலைக்கழிக்கப்படுகின்றனர். மூன்று நாட்களாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை, போராடும் ஜனநாயக உரிமைக்கு எதிரானது.

வன்மையாக கண்டிக்கிறது

இன்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாகத் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராடியுள்ளனர். காவல்துறை சென்னையில் திருவொற்றியூர், ஆர்.கே. நகர், பெரம்பூர் மற்றும் கோவை, மதுரை, கடலூர், தஞ்சை உள்ளிட்ட பல நகரங்களில், கல்வி வளாகத்திற்குள் புகுந்து கைது செய்துள்ளது இதுவரை நடந்திராத செயல். இது மிக மோசமான அத்துமீறல் ஆகும். காவல்துறை கல்லூரி வளாகங்களுக்குள் சென்று மாணவர்களைக் கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. இதுபோன்ற ஜனநாயக விரோத அத்துமீறல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

முதல்-அமைச்சர்

போராடும் உரிமையை நசுக்குகின்ற தமிழ்நாடு காவல்துறையின் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பாக இருக்கிற மாநில முதல்-அமைச்சர், ஜனநாயக உரிமைகள் சார்ந்த போராட்ட நடவடிக்கைகளை ஒடுக்க நினைக்கும் காவல்துறையைக் கட்டுப்படுத்த வேண்டும். சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும், ஜனநாயக ரீதியில் அறப்போராட்டங்களை நடத்தும்போது, உரிய இடத்தை ஒதுக்கி தர வேண்டும்.

ஜனநாயக குரல்களை நெறிப்பது

நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் தமிழக அரசு, நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களின் ஜனநாயக குரல்களை நெரிப்பது பாஜகவின் கல்வி கொள்கைக்கு துணை போவதாகவே அமைந்துவிடும். எனவே, தமிழ்நாடு காவல்துறையின் சட்டவிரோத அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.