தமிழக செய்திகள்

முறைகேடாக பட்டாசு தயாரித்த ஆலைக்கு ‘சீல்’ - உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

வருவாய்த்துறையினர் பல்வேறு இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவேங்கடம்,

திருவேங்கடம் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த ஆலைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆலை உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி நெருங்கி வரும் வேளையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் அனுமதியின்றி பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பதாக திருவேங்கடம் வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சோதனை

இதையடுத்து வருவாய்த்துறையினர் பல்வேறு இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை அதிகாரிகள் திருவேங்கடம் அடுத்துள்ள குளக்கட்டாகுறிச்சி ஸ்ரீ ரங்கராஜபுரம் பகுதியில் உள்ள ஆலையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பட்டாசுக்கு தேவையான திரி மற்றும் பட்டாசு குழாயில் மண் அடைப்பதற்கு அனுமதி பெற்று விட்டு, முறைகேடாக பேன்சிரக பட்டாசுகள் தயாரித்தது தெரிய வந்தது.

பறிமுதல்

எனவே அங்கிருந்த ஏராளமான பட்டாசுகள் மற்றும் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெடிமருந்துகள், மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆலை உரிமையாளரான குளக்கட்டாகுறிச்சியைச் சேர்ந்த கருப்பையா பாண்டியன் மகன் பாலசுப்பிரமணியன் (வயது 65). பட்டாசுகள் தயாரித்த சிவல்பட்டியைச் சேர்ந்த ஜெய்சங்கர் மகன் சிவா (35), குளக்கட்டாகுறிச்சி சேர்ந்த வீரய்யா மகன் அம்புராஜ் (52) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் ஆலைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT