கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மன்னார்குடியில் சட்டவிரோத ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை: 10 பேர் அதிரடி கைது

மன்னார்குடி நகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்டபோலீஸ் கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், மன்னார்குடி நகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

10 பேர் கைது -பறிமுதல்

இந்த அதிரடி சோதனையின் போது, அரசு தடை செய்த ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த முருகேசன், பரமசிவம், கதிரவன், சத்தியமூர்த்தி, கார்த்திகேயன், அருளானந்தம், ஐயப்பன், சசி ஜெஸ்டின், அன்புக்கரசு மற்றும் சுரேஷ் ஆகிய 10 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 2 லேப்டாப், 1 ஐபோன், 12 ஆண்ட்ராய்டு செல்போன்கள், 4 ஆட்டோக்கள், 4 பைக்குகள் மற்றும் ரூ. 63,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் மீது அதிரடி நடவடிக்கை

மன்னார்குடி நகர போலீஸ் நிலைய எல்லைக்குள் இவ்வளவு பெரிய அளவில் சட்டவிரோத ஆன்லைன் லாட்டரி விற்பனை நடந்தும், அதைத் தடுக்கத் தவறியதாக மன்னார்குடி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரை உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.