தமிழக செய்திகள்

சட்ட விரோத மது விற்பனை; போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்: தூத்துக்குடி எஸ்.பி. உத்தரவு

மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நாட்களில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு டாஸ்மாக் பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன.

தூத்துக்குடி,

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கடந்த 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு, டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு டாஸ்மாக் பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன.

அரசால் தடை செய்யப்பட்ட தேர்தல் தினங்களில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க தவறியதாக தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மீது, மாவட்ட எஸ்.பி. மதனுக்கு ரகசிய தகவல்கள் மற்றும் புகார்கள் சென்றன. இதுகுறித்து முதற்கட்ட விசாரணை நடத்திய எஸ்.பி. மதன், இன்ஸ்பெக்டர் திருமுருகனை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்த சூழலில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியில் மெத்தனமாக இருந்ததாகக் கூறி ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி காவல்துறையினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.