சென்னை,
சோழவரம் ஏரியில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் என வெளியான செய்தி தவறானது என தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக, தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சோழவரம் ஏரியில் அள்ளப்படுவது அனுமதிக்கப்பட்ட சரளை மண் (gravel) ஆகும். தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் (TNRDC) மூலம் நடைபெறும் பணிக்காக 15.09.2026 முதல் 09.12.2026 வரை 47,430 மெட்ரிக் டன் சரளை மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசிதழில் சோழவரம் ஏரியில் 39.90 லட்சம் க.மீ சரளை மண் எடுக்க தகுதி அறிவிக்கப்பட்டிருந்தும், 23,715 க.மீ (0.6%) மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. சுமார் 2,200 ஏக்கர் நீர்ப்பரப்பில் 2.63 ஹெக்டேர் (0.3%) பரப்பில், 0.90 மீ சீரான ஆழத்திற்கு மட்டுமே மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தலா 25 மெட்ரிக் டன் கொண்ட 17 லாரிகள் மூலம் 425 மெட்ரிக் டன் எடுக்கப்படுகிறது. மொத்த அனுமதி வரம்பான 47,430 மெட்ரிக் டன்னுக்கு உட்பட்டு, இணைய வழி நடைசீட்டு (e-despatch slip) பெற்ற பிறகே கொண்டு செல்லப்படுகிறது.
அனுமதி பெற்றவரே தனக்கான பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதால், கரை, மதகுகள் மற்றும் பிற கட்டுமானங்களிலிருந்து 50 மீட்டர் இடைவெளி விட்டே பாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஏரி சரளை மண் சாலைப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதால், வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படுவதோடு மண்ணின் அளவை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (TNRDC) அறிக்கையாகப் பதிவு செய்கிறது.
2023ஆம் ஆண்டு நடந்த அமலாக்கத்துறை சோதனை ஆற்று மணல் குவாரிகள் தொடர்பானவை. பொதுச்சாலை அமைப்பதற்காக ஏரிப்படுகையிலிருந்து அனுமதி பெற்று சரளை மண் எடுப்பதற்கும், அந்தச் சோதனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.