தமிழக செய்திகள்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரே வாரத்தில் 346 புகார்களுக்கு உடனடி தீர்வு

காணாமல்போன 14 குழந்தைகள், 6 பெண்கள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மாநிலம் முழுவதும் துரிதமான கள் நடவடிக்கைகள், சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரே வாரத்தில் 346 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தவிர 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காணாமல்போன 14 குழந்தைகள், 6 பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில், பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் 3,580 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் 51 பேர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.