சென்னை,
மேற்காசிய போர் தாக்கல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உரங்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி, பொட்டாஷ் உரம் ரூ.1,850-லிருந்து ரூ.2,250 ஆகவும், காம்ப்ளக்ஸ் ரூ.1,550-லிருந்து ரூ.2,200ஆகவும், பாக்டம்பாஸ் ஒரு மூட்டை ரூ.1,750-லிருந்து ரூ.2,150 ஆகவும், அம்மோனியா சல்பேட் ரூ.1,200-லிருந்து ரூ.1,400 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் யூரியா, சல்பேட் உள்ளிட்ட அடிப்படை உரங்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இதைபோல விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையும் 15% வரை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உரங்களின் விலை உயர்ந்துள்ளதால், உற்பத்தி செலவினங்கள் அதிகரித்துள்ளதாகவும், உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விலை உயர்வு காவிரி டெல்டா மட்டுமின்றி, தமிழ்நாடு முழுதும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது. உரம் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுதும் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் போராட்டங்களை நடத்தினர்.