சென்னை,
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரியில் சேமிக்கப்படுகிறது. சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரி , திருவள்ளூர் மாவட்டம், பூண்டி வட்டத்தில் 1944-ஆம் ஆண்டு கட்டி திறக்கப்பட்டது.
கோடை வெயிலின் தாக்கத்தால் சென்னை மக்களின் தண்ணீர் தேவை அதிகரித்தது. இதனால் பூண்டி, புழல் உள்ளிட்ட குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வந்தது. இதையடுத்து, கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
கடந்த மாதம் 23-ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரிக்கு திறந்துவிடப்பட்டது. இதில் ஆந்திர விவசாயிகளின் தேவைக்கு போக, மீதமுள்ள சுமார் 300 கன அடிக்கும் அதிகமான தண்ணீர் தொடர்ந்து பூண்டி ஏரிக்கு வந்துகொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 285 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு 250 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும். தற்போது ஏரியில் 1,642 மில்லியன் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புழல் ஏரியில் இருந்து 183 கன அடி தண்ணீர் விநியோகத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது. சமீபத்திய நீர்வரத்து காரணமாக புழல் ஏரியின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது, இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரம் கணிசமாக வலுவடைந்துள்ளது.