தமிழக செய்திகள்

இறந்தவரை போல் ஆள்மாறாட்டம் செய்து நிலம் விற்பனை: கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது

முரளிக்கு சொந்தமாக வெள்ளானூர் கிராமத்தில் 2,621 சதுர அடி வீட்டுமனை இருந்தது.

ஆவடி,

ஆள்மாறாட்டம் செய்து, ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த கணவன் - மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆள்மாறாட்டம்

சென்னை ராயப்பேட்டை நல்லண்ண முதலி தெருவைச் சேர்ந்தவர் சியாமளா (வயது 70). இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்டனர். இவரது ஒரே அண்ணன் முரளியும் திருமணமாகாத நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் இறந்துவிட்டார். முரளிக்கு சொந்தமாக வெள்ளானூர் கிராமத்தில் 2,621 சதுர அடி வீட்டுமனை இருந்தது. அவரது ஒரே வாரிசான சியாமளா, அந்த சொத்தை விற்க முடிவு செய்தார்.

இதற்காக ஆவணங்களை சரிபார்த்தபோது, இறந்துபோன முரளியைப்போல் வேறு ஒருவரை அழைத்துச் சென்று ஆள்மாறாட்டம் செய்து, கடந்த பிப்ரவரி மாதம் உஷா என்பவருக்கு நிலத்தை விற்பனை செய்து பத்திரப்பதிவு செய்திருப்பது தெரியவந்தது.

3 பேர் கைது

இதுகுறித்து சியாமளா அளித்த புகாரில், ஆவடி போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் உஷா, அவரது கணவர் குமார் மற்றும் நண்பர்கள் வெற்றிவேல், ஜெயகுமார், அசன்அலி ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதில் மோசடி உறுதியானதை தொடர்ந்து. குமார் (35), அவரது மனைவி உஷா (35), வெற்றிவேல் (42) ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT