சென்னை,
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ஆணையிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு புதிய வழக்குத் தொடர்ந்துள்ளது. காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு சட்டப்பூர்வமாக அனைத்து உரிமைகளும் இருக்கும் நிலையில், மேகதாது அணை விவகாரத்தை திசை திருப்பும் நோக்குடன் இந்த வழக்கை கர்நாடக அரசு தொடர்ந்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாட்டிற்கு அனைத்து உரிமைகளும் உண்டு. அதே நேரத்தில் இந்தத் திட்டத்தை எதிர்ப்பதற்கு கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் இல்லை. காவிரியில் கிடைக்கும் உபரி நீரைக் கொண்டு தான் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டிற்கு காவிரி உபரி நீரை அதன் விருப்பம் போல பயன்படுத்திக் கொள்ளும் உரிமை உண்டு. ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பான வழக்கிலேயே இதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.
மத்திய அரசின் ஒப்புதல் பெறாமல் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை தொடங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறியிருக்கிறது. காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் தேசியத் திட்டமாக அறிவிக்கப்படுவதற்கு தான் மத்திய அரசின் அனுமதி தேவை. காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தின் கடைசி கட்டமாக இது சேர்க்கப்படும் போது தான் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் தேசியத் திட்டமாக மாறும்.
மாறாக, காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்தி வருவதால் அது தமிழக அரசின் சொந்தத் திட்டம்; அதற்கும் தாங்கள் செயல்படுத்தவுள்ள காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதை மதுரை ஐகோர்ட்டும் ஏற்றுக் கொண்டு இத்திட்டத்திற்கு நிலம் எடுக்க தடை விதிக்க முடியாது என 09.10.2026-ல் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வளவுக்குப் பிறகும் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்திருப்பதன் நோக்கம் மேகதாது அணை வழக்கை திசை திருப்புவது தான். கர்நாடகம் தொடர்ந்துள்ள புதிய வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரும் போது, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நீரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை தமிழ்நாட்டுக்கு உண்டு என்று தமிழக அரசின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டால், அதையே காரணம் காட்டி, காவிரியில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டது போக மீதமுள்ள நீரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை கர்நாடகத்திற்கு உண்டு என சுப்ரீம் கோர்ட்டில் மேகதாது அணை தொடர்பான வழக்கில் வாதிடுவது தான் கர்நாடக அரசின் நோக்கம்.
காவிரியின் கடைமடை பாசனப் பகுதியான தமிழ்நாட்டில் உபரி நீரைப் பயன்படுத்தி காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதால், கூடுதலாக பல மாவட்டங்கள் பயனடையுமே தவிர, யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. அதுமட்டுமின்றி, உபரி நீர் இருந்தால் மட்டும் தான் இத்திட்டத்திற்காக 6.3 டி.எம்.சி நீர் வழங்கப்படும். ஆனால், முதல்மடை பாசனப் பகுதியாக கர்நாடகத்தில் சுமார் 70 டி.எம்.சி கொள்ளளவுள்ள மேகதாது அணை கட்டப்பட்டால், அதையும் சேர்த்து கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் மொத்தக் கொள்ளளவு 185 டி.எம்.சியாக அதிகரிக்கும். அனைத்து அணைகளும் நிரம்பிய பிறகு உபரி நீர் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விடும். கடந்த காலங்களில் இது தான் நடந்துள்ளது.
எனவே, கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதையும், தமிழகத்தில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது. இந்த விவகாரத்தில் கர்நாடகத்தின் அனைத்து சதித் திட்டங்களையும் முறியடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் ஒரு கட்டமாக காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு தேவையான ரூ.6,941 கோடியை தமிழக அரசு ஒரே கட்டமாக ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.