சென்னை,
பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2315 முதுகலை ஆசிரியர்களுக்கும், 58 சிறப்பு ஆசிரியர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலை யரங்கில் இன்று காலை நடைபெற்றது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டு கல்வித்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக, கடவுளின் குழந்தைகளாய் போற்றிப் பாராட்டி நேசிக்கப்பட வேண்டிய, சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான கல்வியை போதிக்க, 58 சிறப்பு ஆசிரியர்களை அம்மாவின் அரசு நியமித்துள்ளது என்பதை இந்நேரத்தில் பெருமையுடன் கூறிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
கல்வியின் முக்கியத்துவத்தையும், மேன்மையையும் அறிந்துள்ளதன் காரண மாகத்தான் பள்ளிக் கல்வித் துறைக்கு 2017-18ஆம் ஆண்டிற்கான மொத்த நிதி ஒதுக்கீடாக 26 ஆயிரத்து 932 கோடியே 31 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 14 வகையான மாணவர் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
மாணவர்களின் கலை, இலக்கியத் திறன்களை வெளிக் கொணரவும், தனித்திறன்களை வளர்க்க வும், தமிழர்தம் பாரம்பரிய கலை மற்றும் பண்பாடு மரபுகளைப் போற்றிடும் வகையிலும், கலை, இலக் கியம், நுண்கலை உள்ளிட்ட 150 வகைப் பிரிவுகளில் ஒரு மாபெரும் மாணவர் கலைத் திருவிழா இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தல், கற்றல் திறனை
மேம்படுத்துதல், புதுமையான கற்பித்தல் முறைகளைப் பின்பற்றுதல், அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவு செய்தல், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் ஒருங்கிணைந்து பள்ளி மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சிறப் பாகச் செயல்படும் பள்ளி களைக் கண்டறிந்து புதுமைப்பள்ளி என்ற விருது வழங்கப்படவுள்ளது.
ஒரு மாவட்டத்திற்கு தலா 4 பள்ளிகளுக்கு இவ்விருது வழங்கப்படும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்குத் தலா ஒரு இலட்சம் ரூபாயும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும்
வழங்கப்படவுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை இவ்வாண்டு முதல் சிறந்த முறையில் கணினியைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பயிற்று விக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணைச் செயல்பாடு களில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களைக் கண்டறிந்து ஒரு மாவட்டத்திற்கு தலா 6 ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொரு வருக்கும் கனவு ஆசிரியர் என்ற விருதும், 10 ஆயிரம் ரூபாய் ஊக்கக் தொகையும் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்.
கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற் கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத்திறன் வகுப்பறை சுமார்ட் வகுப்பு அறை ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் 2 இலட்சம் ரூபாய் வீதம் 60 கோடி ரூபாய் இதற்கென செலவிடப்படும்.
மேலும் அனைத்துப் பள்ளி மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கும், மனஅமைதி பெறுவதற்கும், உடல் வலிமை பெறுவதற்கும் யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். ஆகவே, எல்லாப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.