தமிழக செய்திகள்

தமிழகத்தில் வேட்புமனு வாபஸ் முடிந்தது இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு 39 தொகுதிகளில் 845 பேர் போட்டி

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வட சென்னையில் 23 பேரும், மத்திய சென்னையில் 31 பேரும், தென் சென்னையில் 40 பேரும் களத்தில் இருக்கிறார்கள்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.

நாடாளுமன்ற தேர்தலுக் கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கி, 26-ந் தேதி வரை நடைபெற்றது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 27-ந் தேதி தொடங்கியது. போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவது நேற்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 42 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 10 பேரும் போட்டியிடுகிறார்கள்.

வட சென்னை தொகுதியில் 56 மனுக்களும், மத்திய சென்னை தொகுதியில் 52 மனுக்களும், தென் சென்னை தொகுதியில் 69 மனுக்களும் என மொத்தம் 167 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

பரிசீலனையின் போது வட சென்னையில் 32 வேட்பு மனுக்கள், மத்திய சென்னையில் 13 மனுக்கள், தென் சென்னையில் 27 மனுக்கள் என மொத்தம் 72 வேட்புமனுக்கள் தள்ளுபடி ஆனது. இதையடுத்து வட சென்னை தொகுதியில் 24 பேரும், மத்திய சென்னை தொகுதியில் 39 பேரும், தென் சென்னை தொகுதியில் 42 பேரும் வேட்பாளராக போட்டியிட தகுதி பெற்றனர்.

இந்த நிலையில் வட சென்னை தொகுதியில் ஒருவரும், மத்திய சென்னை தொகுதி யில் 8 பேரும், தென் சென்னை தொகுதியில் 2 பேரும் என மொத்தம் 11 சுயேச்சைகள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர்.

இதைத்தொடர்ந்து வெளியான இறுதி பட்டியலின்படி, வட சென்னை தொகுதியில் வீ.கலாநிதி (தி.மு.க.), அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் (தே.மு.தி.க.), சந்தானகிருஷ்ணன் (அ.ம.மு.க.), ஏ.ஜி.மவுரியா (மக்கள் நீதி மய்யம்), பி.காளியம்மாள் (நாம் தமிழர் கட்சி) உள்பட 23 பேர் போட்டியிடுகிறார்கள்.

மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் (தி.மு.க.), சாம் பால் (பா.ம.க.), தெகலான் பாகவி (எஸ்.டி.பி.ஐ.), கமீலா நாசர் (மக்கள் நீதி மய்யம்), டாக்டர் கார்த்திகேயன் (நாம் தமிழர்) உள்பட 31 பேர் களத்தில் உள்ளனர்.

தென் சென்னை தொகுதியில் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் (அ.தி.மு.க.), சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன் (தி.மு.க.), இசக்கி சுப்பையா (அ.ம.மு.க.), ஆர்.ரங்கராஜன் (மக்கள் நீதி மய்யம்), அ.ஜெ.ஷெரின் (நாம் தமிழர்) உள்பட 40 பேர் போட்டியிடுகிறார்கள்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி (தி.மு.க.), பாரதீய ஜனதா சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், அ.ம.மு.க. சார்பில் ம.புவனேஷ்வரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் த.பொ.சி.பொன்குமரன் உள்பட 37 பேர் போட்டியிடுகிறார்கள்.

தென்காசி (தனி) தொகுதியில் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி (அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டி), தனுஷ் எம்.குமார் (தி.மு.க.), பொன்னுத்தாய் (அ.ம.மு.க.), முனீஸ்வரன் (மக்கள் நீதி மய்யம்) உள்பட 25 பேர் போட்டியிடுகிறார்கள்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணனை (பா.ஜனதா) எதிர்த்து எச்.வசந்தகுமார் (காங்.), லட்சுமணன் (அ.ம.மு.க.), ஜே.எபனேசர் (மக்கள் நீதி மய்யம்) உள்பட 15 பேர் போட்டியிடுகிறார்கள்.

தேனி தொகுதியில் ப.ரவீந்திரநாத்குமார் (அ.தி.மு.க.), ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்.), தங்க தமிழ்செல்வன் (அ.ம.மு.க.), எஸ்.ராதாகிருஷ்ணன் (மக்கள் நீதி மய்யம்) உள்பட 30 பேர் களத்தில் உள்ளனர்.

தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் (பா.ம.க.), எஸ்.செந்தில்குமார் (தி.மு.க.), பி.பழனியப்பன் (அ.ம.மு.க.), ராஜசேகர் (மக்கள் நீதி மய்யம்) உள்பட 15 பேர் போட்டியிடுகிறார்கள்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் எச்.ராஜா (பா.ஜனதா), கார்த்தி சிதம்பரம் (காங்.), தேர்போகி எ.பாண்டி (அ.ம.மு.க.), கவிஞர் சினேகன் உள்பட 26 பேரும், கரூர் தொகுதியில் மு.தம்பிதுரை (அ.தி.மு.க.), ஜோதிமணி (காங்.), பி.எஸ்.என்.தங்கவேல் (அ.ம.மு.க.), டாக்டர் ஹரிகரன் (மக்கள் நீதி மய்யம்) உள்பட 42 பேரும், சிதம்பரம் தனி தொகுதியில் பொ.சந்திரசேகர் (அ.தி.மு.க.), தொல் திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), ஆ.இளவரசன் (அ.ம.மு.க.), தி.ரவி (மக்கள் நீதி மய்யம்) உள்பட 13 பேரும் போட்டியிடுகிறார்கள்.

திருச்சி தொகுதியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எஸ்.திருநாவுக்கரசரை எதிர்த்து டாக்டர் வி.இளங்கோவன் (தே.மு.தி.க.), சாருபாலா ஆர்.தொண்டைமான் (அ.ம.மு.க.), வி.ஆனந்தராஜா (மக்கள் நீதி மய்யம்) உள்பட 24 பேர் போட்டியிடுகிறார்கள்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் சுதீஷ் (தே.மு.தி.க.), கவுதம சிகாமணி (தி.மு.க.), கோமுகி மணியன் (அ.ம.மு.க.), கணேஷ் (மக்கள் நீதி மய்யம்) உள்பட மொத்தம் 24 பேரும், நீலகிரி தனி தொகுதியில் மா.தியாகராஜன் (அ.தி.மு.க.), ஆ.ராசா (தி.மு.க.), எம்.ராமசாமி (அ.ம.மு.க.), ராஜேந்திரன் (மக்கள் நீதி மய்யம்) உள்பட 10 பேர் களத்தில் உள்ளனர்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தை (இரட்டை இலை சின்னத்தில் போட்டி) எதிர்த்து டி.எம்.கதிர் ஆனந்த் (தி.மு.க.), எஸ்.பாண்டுரங்கன் (அ.ம.மு.க.), சுரேஷ் (மக்கள் நீதி மய்யம்) உள்பட 23 பேர் போட்டியிடுகிறார்கள்.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியலும் நேற்று வெளியிடப்பட்டது.

அங்கு வைத்திலிங்கம் (காங்.), டாக்டர் நாராயணசாமி என்ற நித்தியாநந்தம் (என்.ஆர்.காங்கிரஸ்), தமிழ்மாறன் (அ.ம.மு.க.), டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியம் (மக்கள் நீதி மய்யம்) உள்பட மொத்தம் 18 பேர் போட்டியிடுகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் அப்போதும், இப்போதும் 845 பேர் போட்டி சென்னை, கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் மொத்தம் 845 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதேபோல் இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் 845 பேர் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்த தேர்தலில் திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை.

இதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டசபை தொகுதிகளில், பாப்பிரெட்டிபட்டி, அரூர், தஞ்சாவூர், சாத்தூர் ஆகிய 4 தொகுதிகளிலும் பெண்கள் போட்டியிடவில்லை.

SCROLL FOR NEXT