சென்னை,
தவெக சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு மாரத்தானில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். இந்த மாரத்தானை தவெக நிர்வாகி அருண்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், நாமக்கல்லில் நடைபெற்ற மாரத்தான் போட்டி குறித்து, தவெக நிர்வாகி அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
போதைப்பொருள்களுக்கு எதிரான போரில்... இளைஞர்களின் காலடிச் சத்தம்!
இன்று நடைபெற்ற போதைப்பொருள்களுக்கு எதிரான மாரத்தானில் திரண்ட இளைஞர் பட்டாளம் சொல்வது ஒன்றே ஒன்றுதான்: "எங்கள் பாதை, போதையில்லாப் பாதை!"
இது வெறும் விழிப்புணர்வு ஓட்டமல்ல; போதை இருளில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்கப் புறப்பட்ட புரட்சி ஓட்டம்!
போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்தத் தவறிய, காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்-அமைச்சரை, அவரது ஆழ்ந்த உறக்கத்திலிருந்து தட்டியெழுப்ப முயலும் ஓட்டம் இது.
களத்தில் ஓடிய கால்களுக்கும், விழிப்புணர்வை விதைத்த நெஞ்சங்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் புரட்சிகரமான வாழ்த்துகள்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.