சென்னை,
சென்னை புனித தோமையார் மலை அருகில் அமைந்துள்ள இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி கல்லூரி தொடர்பான விவரங்கள் அடங்கிய தகவல் பலகைகள் ஓ.டி.ஏ. - நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளன. அவற்றை ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரி தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏஜே பெர்னாண்டஸ் பொதுமக்கள் பார்வைக்கு இன்று திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“சென்னையில் உள்ள இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி கல்லூரி மிக நீண்ட வரலாறும் பெருமைகளும் கொண்டதாகும். ராணுவ அதிகாரிகளாக இணைவதற்கு முன்பாக இக்கல்லூரியில் இளம் வீரர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு பயிற்சிகள், ராணுவ அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டு இங்கு பயிற்சி பெறுவதற்கான வழிமுறைகள் போன்ற பல்வேறு விவரங்கள் இவற்றில் அடங்கியுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய லெப்டினண்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே.பெர்னாண்டஸ், இந்திய ராணுவத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றி, நாட்டுக்கும் ராணுவத்திற்கும் பெருமை சேர்த்த பல்வேறு அதிகாரிகளை உருவாக்கிய பெருமை இக்கல்லூரிக்கு உள்ளது என்றார். இவை தொடர்பான விவரங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவம், வீரம், ஒழுக்கம் ஆகியவற்றை குறித்தும் இந்திய ராணுவம் வழங்கும் பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்தும் இந்த விவரப்பலகைகள் மக்களுக்கு விளக்கி கூறுவதாக தெரிவித்தார்.
இளம் ராணுவ வீரர்களின் உடல் திறன் மட்டுமல்லாமல் அவர்களது ஒட்டுமொத்த மேம்பாடு, அறிவுத்திறன், ஒழுக்க நெறிமுறைகள் ஆகியவை குறித்தும் இப்பயிற்சி கல்லூரியில் சிறந்த பயிற்சிகள் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் பயிற்சி கல்லூரி துணைத் தலைவர் மேஜர் ஜெனரல் எஸ்.முருகேசன், ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளுக்கான தலைமையக தலைமை அலுவலர் மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஸ்ரீனிவாஸ், சென்னை மெட்ரோ ரெயில் நிலையத்தின் திட்டப்பிரிவு இயக்குநர் அர்ச்சுனன், நிதிப்பிரிவு இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, அமைப்பு மற்றும் நிர்வாகப் பிரிவு இயக்குநர் மனோஜ் கோயல் மற்றும் பல்வேறு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஓ.டி.ஏ. மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வருகை தரும் பொதுமக்கள், பயணிகள் என பல்வேறு தரப்பினரிடையே ராணுவம் குறித்தும் அவர்களுக்கு பயிற்சி வழங்கும் அதிகாரிகள் பயிற்சி அகாடமி குறித்தும் விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் இம்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.