தமிழக செய்திகள்

ரூ.5.20 கோடியில் புனரமைக்கப்பட்ட சோழிங்கநல்லூர் தாங்கல் ஏரி திறப்பு

ஏரியின் நடைபாதை மற்றும் பறவை தீவுகளில் 50 வகையான 1800 நாட்டு மரங்கள் நடப்பட உள்ளன.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-199ல் மாநகராட்சியின் சார்பில் இன்போசிஸ் மற்றும் சிறுதுளி தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.5.20 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட தாங்கல் ஏரியினை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.சரவணன் இன்று (05.06.2026) பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், மண்டல அலுவலர் சி.திருநாவுக்கரசு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ரூ.5.20 கோடியில் புனரமைப்பு

சோழிங்கநல்லூர் தாங்கல் ஏரியானது தெற்கு சென்னையில் வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப மையமான சோழிங்கநல்லூரில் அமைந்துள்ளது. ஏரியின் சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுத்து, நீரின் தரத்தை மேம்படுத்தி பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் தற்போது இந்த ஏரியில் மாநகராட்சியின் சார்பில் இன்போசிஸ் மற்றும் சிறுதுளி தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.5.20 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

புனரமைப்பு பணிகள்

இந்த ஏரியானது 24.30 ஏக்கர் பரப்பளவில் 158 மில்லியன் லிட்டர் நீர் கொள்ளளவு திறனுடன் இருந்தது. இந்த ஏரியில் 1,39,518 கனமீட்டர் தூர்வாரப்பட்டு, 1.5 மீ முதல் 3.5 மீ வரை ஆழப்படுத்தப்பட்டு ஏரியின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டு நீர் பரவல் பகுதி 2.11 ஏக்கர் விரிவடைந்துள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகளின் மூலம் 26.51 ஏக்கர் பரப்பளவில் 300 மில்லியன் லிட்டர் நீர் கொள்ளளவு திறனுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஏரியினை ஆழப்படுத்துதல், கரைகளை வலுப்படுத்துதல், பறவைகள் தீவு, நீர்வரத்து கட்டுமானங்கள், நீர் நிரம்பி வழியும் மதகுகள் கட்டுதல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், கரைகளைச் சுற்றி நடைபாதை அமைத்தல், நாற்காலிகள் மற்றும் சோலார் விளக்குகள் அமைத்தல், மரங்கள் நடவு செய்தல் மற்றும் சொட்டு நீர் பாசனம், வெட்டிவேர் நாற்றுகளை நடுதல், ஏரியைச் சுற்றிலும் வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாங்கல் ஏரியின் நடைபாதை மற்றும் பறவை தீவுகளில் 50 வகையான 1800 நாட்டு மரங்கள் நடப்பட உள்ளன. இவை அனைத்திற்கும் சொட்டு நீர் பாசனம் வசதி செய்யப்பட்டுள்ளது. தாங்கல் ஏரி பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் தினமும் பயன்படுத்தும் வகையிலும் மழைநீர் சேமித்திடும் வகையிலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து சுற்றுச்சூழல் நீர் மேலாண்மையை பாதுகாத்திடும் விதமாக இந்த ஏரி புனரமைக்கப்பட்டு இன்று பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.