தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ.வாக இருப்ப வர் சரவணன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஏரல் அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கிருந்த ஊழியர்களிடம் டாக்டர்கள், செவிலியர்கள் 24 மணி நேரமும் முறையாக பணியில் இருப்பது இல்லை. இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குவது கிடையாது, அவர்களை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விடுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளதாக கூறினார்.
மேலும் மருத்துவமனையில் தூங்கிக் கொண்டிருந்த டாக்டரை எழுப்பி, முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் எந்த விதமான பாதிப்புக்கும் ஆளாகாத வகையில் பொறுப்புடன் மருத்துவ பணியில் ஈடுபட வேண்டும். இனிமேல் இதுபோன்று பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைவிடுத்து சென்றார். எம்.எல்.ஏ.வின் இந்த நடவடிக்கைக்கு மருத்துவர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்து இருந்தன.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று அரசு டாக்டர்களுக்கு எதிராகவும், எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அதாவது, 'பொதுமக்கள் வன்மையான கண்டனம்' என்ற பெயரில் அந்த போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டு இருந்தன.மேலும் அதில் இந்த விஷயத்தை எம்.எல்.ஏ. கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?, இது மக்கள் நலன் சார்ந்த பிரச்சினை என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த போஸ்டர் விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.