கைது 
தமிழக செய்திகள்

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் உடல்களுடன் ‘ரீல்ஸ்' எடுத்த த.வெ.க.வை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது

சவக்கிடங்கு பணியாளர் சீனிவாசனிடம் ரூ.200 கொடுத்து சாவியை பெற்று. சவக்கிடங்கை திறந்து உள்ளே சென்று அங்கிருந்த உடல்களுடன் 'ரீல்ஸ்' எடுத்தது தெரியவந்தது.

பெரம்பூர்,

சென்னை எர்ணாவூரைச் சேர்ந்த ஆனந்த் என்ற பல் ஆனந்த் என்பவர் மூச்சுத்திணறல் ஏற் பட்டு இறந்தார். அவரது உடலை பார்க்க அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வந்த வியாசர்பாடி யைச் சேர்ந்த அவரது நண்பர்களான ஆராய்ச்சி என்ற சதீஷ்குமார் (வயது 25), தீனா என்ற தினேஷ்குமார் (30) ஆகியோர், அங்கிருந்த உடல்களுடன் செல்போனில் வீடியோ எடுத்தனர்.

இதுகுறித்து நிலைய மருத்துவ அதிகாரி வனிதாமலர் அளித்த புகாரின் பேரில் ஸ்டான்லி ஆஸ்பத்திரி போலீசார் நடத்திய விசாரணையில், இவர்கள் இருவரும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பேட்டரி கார் டிரைவராக வேலை செய்து வரும் வியாசர்பாடியைச் சேர்ந்த சங்கர் (44) என்பவர் மூலம் சவக்கிடங்கு பணியாளர் சீனிவாசனிடம் ரூ.200 கொடுத்து சாவியை பெற்று. சவக்கிடங்கை திறந்து உள்ளே சென்று அங்கிருந்த உடல்களுடன் 'ரீல்ஸ்' எடுத்தது தெரியவந்தது.

சதீஷ்குமார், தினேஷ்குமார், சங்கர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட 3 பேரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதில் தினேஷ்குமார், த.வெ.க. கட்சி உறுப்பினர் என போலீசார் தெரிவித்தனர்.

சவக்கிடங்கு பணியாளர் சீனிவாசனுக்கு வலது கை பாதிக்கப்பட்டு இருப்பதால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நிலைய மருத்துவ அதிகாரி தெரிவித்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT