தேர்தல் ஆணையம்  
தமிழக செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம்: 2 நாள் சிறப்பு முகாம்களில் 2.23 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம் தகவல்

புதிய வாக்காளர் பெயர் சேர்த்தலில் சனிக்கிழமை 48,839 பேரும், ஞாயிற்றுக்கிழமை 69,444 பேரும் என மொத்தம் 1,18,283 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற்காக நடைபெற்ற 2 நாள் சிறப்பு முகாம்களில் மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 396 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

சிறப்பு முகாம்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 01.01.2027-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் (2027) நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கடந்த சனி (21.11.2026) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (22.11.2026) ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

2.23 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன

இந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றிற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். இதில் சனிக்கிழமை அன்று 90,171 விண்ணப்பங்களும், ஞாயிற்றுக்கிழமை அன்று 1,33,225 விண்ணப்பங்களும் என மொத்தம் 2,23,396 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரம் வருமாறு:

• படிவம் 6 (புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல்): சனிக்கிழமை 48,839 பேரும், ஞாயிற்றுக்கிழமை 69,444 பேரும் என மொத்தம் 1,18,283 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

• படிவம் 6 ஏ (வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்த்தல்): ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

• படிவம் 7 (பெயர் நீக்கம் மற்றும் ஆட்சேபனை): சனிக்கிழமை 6,247 விண்ணப்பங்களும், ஞாயிற்றுக்கிழமை 7,756 விண்ணப்பங்களும் என மொத்தம் 14,003 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

• படிவம் 8 (திருத்தம் மற்றும் இடமாற்றம்): சனிக்கிழமை 35,085 விண்ணப்பங்களும், ஞாயிற்றுக்கிழமை 56,022 விண்ணப்பங்களும் என மொத்தம் 91,107 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT