தஞ்சை,
நெல் சாகுபடியில் இலை சுருட்டுப்புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து அம்மாப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அம்மாப்பேட்டை வட்டாரத்தில் தற்பொழுது நிலவும் தட்பவெட்ப நிலை காரணமாக, சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் செம்பேன், தண்டு துளைப்பான் மற்றும் இலை சுருட்டுப்புழு ஆகிய பூச்சிகளின் தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. செம்பேன் எனப்படும் சிவப்பு சிலந்தி தாக் குதலின் போது இலையில் அடிப்பகுதியில் சிவப்பு அல்லது மஞ்சள் நிறப்புள்ளிகள் தோன்றும். இலைகள் பழுப்பு நிறமாக மாறி காய்ந்து போகும் அல்லது முழுமையாக மஞ்சள் நிறமாகும். இலைகளின் மேற்ப ரப்பில் நுண்ணிய வலைகள் அல்லது வெளிரிய புள்ளிகள் காணப்படும்.
எனவே நீர் மேலாண்மையை சரியாக பராமரிக்க வேண்டும் ஆரம்பத்தில் வேப்ப எண்ணெய் கரைசல் 3 சதவீதம் என்ற அளவில் தெளிக்கலாம்.
குருத்துப்பூச்சி எனப்படும் தண்டு துளைப்பானின் தாக்குதலால் இளம் பயிரில் நடு குருத்து வாடி காய்ந்து விடும். கதிர் பிடிக்கும் தருணத்தில் தாக்குதல் ஏற்படின் நெல்மணிகள் பால் பிடிக்காமல் வெண் கதிர்களாக மாறி மகசூல் பாதிப்படைகிறது. இதன் தாக்குதலை கட்டுப்படுத்த நாற்றுகளை நெருக்கமாக நடுவதை தவிர்த்து தேவையான தழைச்சத்தினை மூன்று அல்லது நான்கு தடவையாக பிரித்து இடுதல் வேண்டும். முதிர்ந்த நாற்றுகளை நடும்போது நுனியை கிள்ளிவிட்டு நடுவதனால் குருத்துப் பூச்சியின் முட்டை குவியல்களை அழித்து விடலாம். விளக்கு பொரியினை மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிர விட்டு குருத்துப் பூச்சியின் தாய் அந்து பூச்சிகளை கவர்ந்தழிக்கலாம்.
இலை சுருட்டுப் புழுக்கள் நெற்பயிரின் இலைகளை ஒன்றிணைத்து கொண்டு அவற்றில் உள்ள பச்சையத்தை சுரண்டி உண்பதால் இலை களில் வெள்ளை வெள்ளையாக காணப்படும். இதன் தாக்குதல் வயல் ஓரங்களில் நிழலான பகுதிகளிலும் யூரியா போன்ற தழைச்சத்து உரங்களை அதிகமாக பயன்படுத்திய பகுதிகளிலும் மிகுந்து காணப்படும்.
எனவே வயல் வரப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலமாகவும் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து அதிகமாக இடாமல் மூன்று அல்லது நான்கு முறை பிரித்து இடுவதன் மூலமாகவும் இதன் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். பறவை இருக்கைகளை வைத்து பறவைகளை கவர்ந்து புழுக்களை அளிக்கலாம். நெல் தண்டு துளைப்பான் மற்றும் நெல் இலை சுருட்டுப்புழு தாக்குதலை தடுக்க கார்ட்டாப் ஹைட்ரோ குளோரைடு 50 எஸ்.பி என்ற மருந்து 400 கிராம் ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.