தமிழக செய்திகள்

பேரிக்காய் விளைச்சல் அதிகரிப்பு

கோத்தகிரி பகுதியில் பகுதியில் பேரிக்காய் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் பகுதியில் பேரிக்காய் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

பேரிக்காய் சாகுபடி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களுக்கு நடுவே ஊடு பயிராக பேரிக்காய் சாகுபடி செய்து உள்ளனர். இதில் நாட்டு பேரி, முள்பேரி, தண்ணீர் பேரி, ஊட்டி பேரி, வால்பேரி ஆகிய வகைகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலம் பேரிக்காய் சீசனாகும். தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் கோத்தகிரி அருகே உள்ள தாந்தநாடு, அரக்கம்பை, மிளிதேன், அளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளின் தோட்டத்தில் உள்ள மரங்களில் பேரிக்காய்கள் காய்த்து குலுங்கி வருகின்றன. பிற பகுதிகளில் விளையும் பேரிக்காய்களை விட நீலகிரி மலைப்பகுதிகளில் விளையும் பேரிக்காய்களுக்கு தனிச்சுவை உண்டு. இதனால் இங்கு விளையும் பேரிக்காய்கள், தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

விளைச்சல் அதிகரிப்பு

இதற்கு முன்பு விவசாயிகளே பேரிக்காய்களை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வந்தனர். ஆனால் சீசனில் காய்த்து குலுங்கும் பேரிக்காய்களை குரங்குகள், காட்டெருமைகள், கரடிகள் உள்ளிட்டவை தின்று நாசம் செய்து வருவதால், அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வந்தது. எனவே விவசாயிகள் தங்களது தோட்டங்களை வியாபாரிகளுக்கு குத்தகைக்கு விட்டு விடுகின்றனர். அவர்கள் காவலுக்கு ஆட்களை வைத்து, பேரிக்காய்களை அறுவடை செய்து விற்பனைக்காக வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். பெரும்பாலும் கோத்தகிரி பகுதியில் விளையும் பேரிக்காய்கள் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தற்போது பேரிக்காய் விளைச்சல் அதிகரித்து உள்ளதாலும், நல்ல கொள்முதல் விலை கிடைப்பதாலும் அதைப் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிலோ ரூ.80-க்கு கொள்முதல்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பேரிக்காய் சிறந்த மருத்துவ குணங்கள் கொண்டது ஆகும். இதய படபடப்பு மற்றும் இதயம் பலவீனமானவர்கள் தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும். நீர்ச்சத்து மிகுந்த பேரிக்காய் உடல் சூட்டை குறைக்கும். மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை கரைக்கவும் உதவுகிறது. பேரிக்காயை தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், வகை-2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. இதிலுள்ள பிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயனங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. மேலும் மலச்சிக்கல் தொடர்பான நோய்களுக்கும், குடல் புண்ணுக்கும் சிறந்த நிவாரணியாக உள்ளது.

விளைச்சல் மற்றும் ரகத்திற்கு தகுந்தாற்போல் ஒரு கிலோ பேரிக்காய் ரூ.60 முதல் ரூ.80 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. அவை பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ரூ.150 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.