தமிழக செய்திகள்

திருச்சி மாவட்டத்தில் நீர், நிலவாழ் பறவைகள் வருகை அதிகரிப்பு - கணக்கெடுப்பில் தகவல்

திருச்சி மாவட்டத்தில் நடந்த கணக்கெடுப்பில் நீர்வாழ் மற்றும் நிலவாழ் பறவைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

திருச்சி,

பறவைகள் கணக்கெடுப்பு

தமிழகத்தில் மாநிலம் முழுவதும் உள்ள பறவைகளின் பன்முகத்தன்மையை கண்காணித்து, பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு வனத்துறை 2023-ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் மாநில அளவிலான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இதன் மூலம் அரியவகை பறவை இனங்கள் வருகை குறித்த தகவல்கள் வெளியாகும்.

அதன்படி, தமிழகம் முழுவதும் 2025-26ம் ஆண்டுக்கான ஈர நில மற்றும் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதமும், நடப்பாண்டு பிப்ரவரி மாதமும் வனத்துறை அதிகாரிகள், பறவை நிபுணர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பறவை பார்வையாளர்களின் தீவிர பங்கேற்புடன் நடத்தப்பட்டது. இதில், கணக்கெடுக்கப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை, இனங்கள் குறித்த, விவரங்கள் தமிழக வனத்துறையால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட பறவை இனங்கள் குறித்து, மாவட்ட வன அலுவலர் கிருத்திகா கூறியதாவது:-

நீர், நிலவாழ் பறவைகள்

டிசம்பர் மாதம் 20 இடங்களில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் வனப்பகுதிகளில் நடந்தது. இதில் 121 நீர்ப்பறவை இனங்களை சேர்ந்த 11,113 பறவைகள் கண்டறியப்பட்டன. அவற்றில், 50 நீர்ப்பறவை இனங்களை சேர்ந்த 6,605 பறவைகள் இங்கு நிரந்தரமாக தங்கி இருப்பவை என தெரிய வந்துள்ளது. இதனுடன், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 71 இனங்களைச் சேர்ந்த 4,508 பறவைகளும் இக்கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டன.

இதுபோல், பிப்ரவரி மாதம் 20 இடங்களில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 126 பறவை இனங்களை சேர்ந்த 3,848 நிலவாழ் பறவைகள் நேரடியாக கண்டறியப்பட்டன. அவற்றில், 102 பறவை இனங்களை சேர்ந்த 3,563 பறவைகள் இங்கு நிரந்தரமாக இருப்பவை என தெரியவந்தது. மேலும் 24 இனங்களைச் சேர்ந்த 285 பறவைகள் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மாவட்டத்திற்கு வலசை வந்தவை.

அதிகரிப்பு

குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட நீர்ப்பறவைகளில் சில இனங்கள் ஊதா சதுப்புக்கோழி, பெசண்ட்-டெயில்ட் ஜகானா, பிளாக்-ஹெட்டட் ஐபிஸ், கிரே ஹெரான், கிளாஸி ஐபிஸ், ஓரியண்டல் டார்ட்டர், லிட்டில் கார்மோரண்ட் மற்றும் லிட்டில் ஸ்டிண்ட் ஆகும். இந்த பறவைகள் இயற்கை சூழலுக்கு ஏற்ப வருகை தருகின்றன.

2024-2025ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பை ஒப்பிடும்போது பறவைகள் இனங்களும், பறவைகளின் எண்ணிக்கையும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இதற்கு திருச்சி மாவட்டத்தில் பறவைகள் இனப்பெருக்கத்துக்கு உகந்த கால நிலையும், வசிப்பிடமும் கிடைப்பதால் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.