தமிழக செய்திகள்

சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சட்டசபை நிகழ்வுகளை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

சென்னை,

சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, 'முந்தைய காலங்களில் சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக பார்ப்பதற்கு பலர் தயக்கம் காட்டியது உண்டு. அதற்கு முக்கிய காரணம் அனுமதி கிடைக்குமா? என்பதுதான். இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து இருப்பது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது.

அதாவது, 2023-ம் ஆண்டு 20 ஆயிரத்து 137 பேரும், 2024-ம் ஆண்டு 10 ஆயிரத்து 754 பேரும், 2025-ம் ஆண்டு 20 ஆயிரத்து 123 பேரும் சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக பார்த்துள்ளனர். தற்போது சட்டமன்றம் 28 நாட்கள்தான் நடந்துள்ளது. நேரலையில் சட்டசபை நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்ட போதும் சட்டசபைக்குள் என்ன நடக்கிறது? என்பதை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த 28 நாட்களில் மட்டும் 32 ஆயிரத்து 55 பேர் சட்டசபைக்கு நேரடியாக வந்து பார்த்துள்ளனர்.

அதுவும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு சட்டசபை நிகழ்வுகளை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம்தான் இதற்கு காரணம். சராசரியாக 20 பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமே ஆண்டுதோறும் சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக பார்த்து வந்த நிலையில் இந்த முறை 76 பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் வந்துள்ளனர்' என்றார்.

SCROLL FOR NEXT