வால்பாறை,
பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஆழியாறு, வால்பாறை, டாப்சிலிப், பரம்பிக்குளம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி பகுதிக்கு அதிகமாக படையெடுத்தனர். ஆனால் கடும் வெயிலின் காரணமாக வெப்ப சலனம் நிலவியது. மேலும் குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் வால்பாறை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வறண்டு கிடந்த வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது. மேலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் கோடை விடுமுறை முடிந்த பிறகும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வால்பாறைக்கு வரத்தொடங்கி உள்ளனர். இதன்படி விடுமுறை தினமான இன்று வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இதனால் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையில் இ-பாஸ் நடைமுறையின் காரணமாக சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். சுற்றுலா பயணிகள் வாகனங்களுடன் காத்திருந்ததால் வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று ஆழியாறு பூங்கா முன் வால்பாறை ரோட்டில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தியதாலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யவும், வால்பாறை ரோட்டில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதை தடுக்கவும் வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.