தமிழக செய்திகள்

திருக்கோவில் பணியாளர்களுக்கு திருமணக்கடன் உயர்வு - அரசாணை வெளியீடு

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பணிபுரியும் அனைத்து திருக்கோவில்களின் பணியாளர்களுக்கும் பொருந்தும்.

சென்னை,

திருக்கோவில் பணியாளர்களுக்கு திருமணக்கடன் உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் 2026 - 27ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக்கோரிக்கையின் போது, சட்டமன்றப்பேரவையில் திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கல்வி நிறுவனங்களை மேம்படுத்துதல், பணியாளர் நலன் சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

திருமணக்கடன் உயர்வு

இவற்றில் திருக்கோவில் பணியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, “திருக்கோவில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் திருமணக்கடன் தொகை உயர்த்தி வழங்கப்படும்“ (அறிவிப்பு எண் 81) என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே, திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளின் திருமணத்திற்காக ஆண் பணியாளர்களுக்கு ரூ.6,000 மற்றும் பெண் பணியாளர்களுக்கு ரூ.10,000 என திருமணக்கடன் வழங்கப்பட்டு வந்தது. திருக்கோவில் பணியாளர்களின் நலன் சார்ந்த அறிவிப்புகளை இவ்வரசு செயல்படுத்தும் வகையில், தற்போது முதுநிலைத் திருக்கோவில்களின் பணியாளர்களுக்கு ரூ.2 லட்சமாகவும், முதுநிலை அல்லாத திருக்கோவில்களின் பணியாளர்களுக்கு ரூ.1 லட்சமாகவும் திருமணக்கடன் தொகை உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

36 மாதத்தவணையில் பிடித்தம்...

இந்த உயர்த்தப்பட்ட திருமணக்கடன் தொகை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பணிபுரியும் அனைத்து திருக்கோவில்களின் பணியாளர்களுக்கும் பொருந்தும். இக்கடன்தொகை திரும்பப்பெறும் காலம் அரசு ஊழியர்களுக்கான விதிகளின்படி 36 மாதத்தவணையில் பிடித்தம் செய்யப்படும்.

திருக்கோவில் பணியாளர்களின் பணிநலன், குடும்பநலன் மற்றும் சமூகப்பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புக்கான பணப்பலன் மற்றும் மகப்பேறு விடுப்பு, திருமண கடன் உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் திருக்கோவில் பணியாளர்களின் நலன் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT