தமிழக செய்திகள்

சுதந்திர தின விழா: முதல்-அமைச்சர் விஜய் செல்லும் வழித்தடம் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு; டிரோன்களுக்கு தடை

ஆகஸ்டு 14, 15 ஆகிய நாட்களில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமை செயலகம், முதல்-அமைச்சர் செல்லும் வழித்தடம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய நாடு, 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அந்த நாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி, சென்னை தலைமைச்செயலகம் செயல்பட்டு வரும் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தேசிய கொடியை ஏற்ற இருக்கிறார்.

அணிவகுப்பு ஒத்திகை

இதனையொட்டி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சுதந்திர தின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை மெரினா கடற்கரையில் நடைபெற்று வருகிறது.

டிரோன்களுக்கு தடை

இந்த நிலையில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமை செயலகம், முதல்-அமைச்சர் விஜய் செல்லும் வழித்தடம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, நீலாங்கரை முதல் தலைமை செயலகம் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ஆகஸ்டு 14, 15 ஆகிய நாட்களில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

விருது

சுதந்திர தின விழாவில், முதல்-அமைச்சர் விஜய், தமிழ்நாட்டுக்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த தகைசால் தமிழர் என்ற பெயரிலான விருதும், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழையும் வழங்க இருக்கிறார்.

அதேபோல், அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்-அமைச்சர் விருதுகள், முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளையும் முதல்-அமைச்சர் விஜய் வழங்கி கவுரவிக்க உள்ளார்.

இதற்கு முன்பு சென்னை கோட்டை கொத்தளத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் சுதந்திர தின நாளில் தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளனர். அந்த வகையில், 7-வது முதல்-அமைச்சராக விஜய் தேசிய கொடியை ஏற்றிவைக்க இருக்கிறார்.