சோழிங்கநல்லூர்,
தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ள மனுக்கள் ஏற்கப்பட்டு, தகுதி இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வாபஸ் பெறுவதற்கு இன்று (வியாழக்கிழமை) கடைசி நாள். இன்று மாலை 3 மணி அளவில் இறுதி வேட்பாளர்கள் விவரம் வெளியிடப்பட உள்ளது.
சோழிங்கநல்லூரை அடுத்த மேடவாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான தனசேகர் என்பவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான சுயேச்சை வேட்பாளர் தனசேகர் சோழிங்கநல்லூரில் உள்ள தொகுதி தேர்தல் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று தனசேகர் சோழிங்கநல்லூரில் உள்ள தேர்தல் அலுவலகத்துக்கு கையில் பெட்ரோல் கேனுடன் வந்து அலுவலகம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்த செம்மஞ்சேரி போலீசார் அவரிடமிருந்த பெட்ரோல் கேனை பறித்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக ஆட்டோவில் வந்த தனசேகர் ஆட்டோவின் கண்ணாடியை கையால் உடைத்ததில் கையில் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, "சுயேச்சை வேட்பாளர் தனசேகர் தன்னுடைய முழு விவரத்தையும் மனுவில் பூர்த்தி செய்யவில்லை. போதுமான சாட்சியாளர்கள் பரிந்துரை இல்லை. முறையாக மனுவை பூர்த்தி செய்யாததே வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு காரணம்" என்று கூறினார்.